தூத்துக்குடி அருகே பிரபல வங்கி அருகே மர்ம துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ளது மாப்பிள்ளையூரணி.
இந்த பகுதியில் பிரபல கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பின் பக்கம் அதிகாலை ஒரு துப்பாக்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அரிஹரன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.
அந்த துப்பாக்கி பறவைகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் ஏர்வகையை சேர்ந்தது என தெரிய வந்தது. சுமார் 3 அடி நீளம் இருந்தது அது. இதை வைத்து கொள்ள லைசென்ஸ் தேவையில்லை. இருப்பினும் வங்கி அருகே துப்பாக்கியை போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அந்த துப்பாக்கி அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவரும் அந்த வங்கியின் வாட்ச்மேன் சின்னதம்பி என்பவருக்கும் இரவு வேகுநேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் வீடு திரும்பிய போது மறதியாக பாலமுருகன் துப்பாக்கியை விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஏதாவது சதி வேலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சின்னதம்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி அருகே துப்பாக்கி கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/gun-found-near-bank-202540.html
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/gun-found-near-bank-202540.html
0 comments