துாத்துக்குடியில் பள்ளி வகுப்பறையில் திடீரென மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி குருஸ்புரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஹாஸ்டல் மாணவியர் இன்று காலை உணவாக உளுந்தங்கஞ்சி சாப்பிட்டிருந்தனர். அவர்கள் பள்ளி வகுப்பறையில் இருக்கும்போது ஒருவர் பின் ஒருவராக திடீரென்று மயங்க விழுந்தனர்.
மேலும் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 70 மாணவிகள் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சிகிச்சைபெறும் மாணவிகளை துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், உதவி ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ், தாசில்தார் சந்திரன்,மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே மாணவிகள் வாந்தி மயக்கம் பற்றி அறிந்த அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் இவர்கள் சாப்பிட்ட காலை உணவில் புட்பாய்சன் காரணமா? என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் சாப்பிட்ட உணவின் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 comments