சிவகங்கை அருகே கீழடி பள்ளிச் சந்தை புதூரில் நடந்து வந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை நகரம் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்வுப் பிரிவு சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இதில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான நகரில் வசித்தவர்கள் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கடந்த 1963 முதல் 1973-ம் ஆண்டு வரை காவிரி பூம்பட்டினத்தில் நடந்த அகழ் வாராய்ச்சிக்குப் பின், தென் தமிழகத்தில் வைகை நதியை ஒட்டிய பகுதியில் நடைபெறும் முதல் அகழ்வாராய்ச்சி இதுவாகும்.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியது: செவிவழிச் செய்திகளில் குறிப்பிடப்படும் தகவல்களை உரிய கல்வெட்டுகள், சான்றுகளுடன் நிரூபிப்பது அகழ்வாராய்ச்சியாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரமான மதுரை குறித்து நடைபெறும் முதல் விரிவான அகழ்வாராய்ச்சி இது. தற்போது மதுரை வளர்ச்சியடைந்த நகராக உள்ளது. அங்கு அகழ்வாராய்ச்சி செய்வது சிரமமான காரியம்.
எனவே, மதுரையை ஒட்டி தொன்மையான பெயரில் தற்போதும் வழங்கப்படும் கிராமங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி வைகை நதி தொடங்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் அழகன்குளம் வரை 293 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் மணலூர் கிராமம் தலைநகராக இருந்ததாக செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில், அந்தக் கிராமத்தைச் சுற்றி கல்வெட்டுகள், முதுமக்கள் தாழி போன்றவை ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதில், சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட குந்திதேவி சதுர் வேதிமங்கலம் என்பது மருவி தற்போது கொந்தகையாக உள்ளது. திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூர் என்பது வணிகர்களோடு தொடர்புடைய ஊர் என்பதை கண்டறிந்தோம். இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க கால வீடுகள், அம்மக்கள் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், உலோகங்கள், கண்ணாடி, மண்பாண்டங்கள், அணிகலன்கள் கிடைத்து வருகின்றன. மேலும் வெளிநாடுக ளோடு வணிகத் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோமானிய நாட்டின் உயர்ரக பானைகளான ரவுலட் மற்றும் ஹரிட்டைன் மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் பானையில் உட்புறம் கருப்பும், வெளிப்புறம் சிவப்பாகவும் உள்ள அரிதான மண்பாண்டமும் கிடைத்துள்ளது. பழங்கால பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், ஆராய்ச்சிக் காலத்தை நீட்டிக்கும்படி அனுமதி கேட்டுள்ளோம். இந்த அகழ்வாராய்ச்சிக்கு, பள்ளிச்சந்தை புதூரைச் சேர்ந்த சோணை மகன் சந்திரன், அப்துல்ஜபார் மகன் திலிப்கான் ஆகியோர் அவர்களது சொந்த தென்னந்தோப்பை மனமுவந்து வழங்கி உள்ளனர் என்றார்.
0 comments