ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » பிளாஸ்டிக் பொட்டல பொருள்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கலாமா? மத்திய அரசு பதிலளிக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Image result for பிளாஸ்டிக் பொருட்கள்

உணவு, மருந்துப் பொருள்களை பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்வதை முழுமையாகத் தடை செய்வது குறித்த தனது கருத்துகளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 தன்னார்வ அமைப்பு ஒன்றின் மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய தலைமை நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
 பிளாஸ்டிக் புட்டிகள், அழுத்தமிகு பிளாஸ்டிக் டப்பாக்கள் (டப்பர்வேர்) உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், குளிர்பானங்களை பிளாஸ்டிக் புட்டிகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்தும் உத்தரவிடக் கோரி தன்னார்வ அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 சில மருந்துகள் அடைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகளை ஆய்வு செய்தபோது அதில் குரோமியம், காரீயம் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது என்றும் அந்தத் தன்னார்வ அமைப்பு கூறியது.

 இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பசுமைத் தீர்ப்பாயம் முன் மத்திய அமைச்சகங்கள் முன்வைத்த வாதத்தில், "குறிப்பிட்ட ஆய்வை மேற்கொண்ட தேசிய ஆய்வு அமைப்பு (என்டிஹெச்) என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் கிடையாது' என்று தெரிவிக்கப்பட்டது.
 இதன் பின்னர் பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் கூறியதாவது:
 பொதுமக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதை சம்பந்தப்பட்ட எந்தவொரு அமைச்சகமும் உணரவில்லை என்பது தெளிவாகிறது.
 அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இந்த வழக்கை நாங்கள் விசாரிப்போம். இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு உள்பட்டு ஒரு முடிவெடுப்போம்.
 மத்திய சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மருந்து தயாரிப்பு வாரியம், இந்திய உணவுப் பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம், தனியார் நிறுவனங்கள் உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம்.
 இந்த விவகாரத்தில் இணை இயக்குநர் மூலமாக தங்களது பிரமாணப் பத்திரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரத்தை, இணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரிகள் மூலம் கையாளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
 இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை, வரும் 14-ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் நடைபெற இருக்கிறது.
 தடை விதித்தால் என்னவாகும்?
 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவின்படி, பிளாஸ்டிக் பொட்டலங்களைத் தடை செய்தால் கீழ்க்காணும் பொருள்களின் விற்பனை முடங்கும். 
 அதாவது, மளிகைப் பொருள்கள், பால், தேங்காய் எண்ணெய், ஷாம்பு, ரொட்டி , குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்ய முடியாது.
 
Tags: News

0 comments

Leave a Reply