ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் » தாமிரபரணி ஆறு சுத்தப்படுத்தும் பணி போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கம்


வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கிவைத்தார். ஒவ்வொரு
சனிக்கிழமையும் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி தொடரும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பணியை சமூக ஆர்வலர்கள்
பாராட்டியுள்ளனர்.
தமிழக ஆறுகளில் வற்றாத ஜீவநதி என பெயரெடுத்தது தாமிரபரணி. பொதிகை மலையில்
தோன்றி திருச்செந்தூர் புன்னக்காயல் வரை சுமார் 120 கிலோ மீட்டர் தூரம்
சென்று கடலில் கலக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின்
வாழ்வாதாரம் தாமிரபரணியை நம்பிதான் உள்ளது. ஆனால் தாமிரபரணி ஆற்றின் நிலைமை
தற்போது படுமோசமாக உள்ளது.பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள்,
செப்டிக்டேங்க் கழிவுகள், விவசாய உரம், பூச்சிமருந்து கழிவு, ஆயில் கழிவு,
சாக்கடை கழிவுகள், அமலைச் செடிகள், முட்செடிகள் மற்றும் மணல் கொள்ளையால்
அமுதமான தாமிரபரணி அமிலமாக மாறிவிட்டது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தாமிரபரணி ஆற்று தண்ணீரில் சுவை
இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆற்றுக்குடிநீரில் சுவை காணாமல் போய்விட்டது.
ஆற்றுக்குடிநீரை குடிக்கவே தயங்குகிறார்கள். மக்கள் அனைவரும் மினரல்
வாட்டர் வாங்கி குடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இதற்கு காரணம் தாமிரபரணி ஆறு சொல்லமுடியாத அளவிற்கு மாசுபட்டு விட்டது.
இதனை தடுக்ககோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு
அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பெரிய அளவில்
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் தாமிரபரணி நெல்லை மாநகர எல்லைக்குள் வரும் போது தான் அதிக
அளவில் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாநகர பகுதிகளில்,
எந்தெந்த இடங்களில் சாக்கடை கழிவுகள் கலக்கிறது என்பது குறித்து
பத்திரிகைகள் மூலம் மாநகராட்சியின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்ற
பிறகும் கூட அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மாநகர போலீசார் மூலம்
மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் கருணாசாகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மாநகர போலீஸ், நெல்லை பத்திரிகையாளர்கள் மன்றம் மற்றும் தாமிரபரணி
பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆற்றை சுத்தப்படுத்துவது என முடிவு
செய்யப்பட்டது. அதன்படி நேற்று நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றின்
கரையோர பகுதியில் வளர்ந்துள்ள அடர்ந்த முட்செடிகளை அகற்றும்
பணிதுவங்கியது. பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பணிகளை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் கருணாசாகர் நிருபர்களிடம் கூறியதாவது:வரலாற்று சிறப்புமிக்க ஆறுகளில் தாமிரபரணி ஆறு முக்கியமானது. இந்த ஆற்றில்
குளித்தால் பாவம் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட புண்ணிய ஆறு,
பிளாஸ்டிக், சாக்கடை கழிவுகளால் மாசுபடுகிறது. இந்த ஆற்றை
சுத்தப்படுத்தும் பணியில் போலீஸ் துறை, பத்திரிகையாளர்கள், தாமிரபரணி
பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த
பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். போலீசாருடன் மற்ற சங்கங்கள், சமூக
அமைப்புகள் இணைந்து இப்பணியில் தொடர்ந்து ஈடுபடலாம். இதை மக்கள் அமைப்பாக
மாற்றி தாமிரபரணியில் மாசு கலப்பதை தடுப்பது குறித்து விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கமிஷனர் கருணாசாகர் கூறினார்.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தலைவர் ஜோசப் கென்னடி கூறுகையில்,கடந்த 4
மாதங்களாக எங்களது இயக்கம் சார்பில் கரையோர பகுதி மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்திவருகிறோம். எங்களது அமைப்புடன் இணைந்து போலீசாரும்
பணியாற்றுவார்கள் என கமிஷனர் உறுதி அளித்துள்ளார். சுத்தமல்லி அணைக்கட்டில்
இருந்து மருதூர் அணைக்கட்டு வரை கருப்பன்துறை, சிந்துபூந்துறை,
மணிமூர்த்தீஸ்வரம் வழியாக ஆற்றோர சாலை முன்பு இருந்தது. இந்த இடங்கள்
இப்போது முற்றிலும் ஆக்ரமிக்கப்பட்டு விட்டது. இதனை தடுக்க வேண்டிய
பொதுப்பணித்துறையினர் ஏனோ கண்டுகொள்ளவில்லை. எனவே ஆற்றங்கரையோரைமாக
செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் ஆக்ரமிப்புகளை
அகற்ற பொதுப்பணித்துறையினர் முன்வரவேண்டும். என்றார்.
ஆர்வமுடன் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள்:
போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாலன், உதவி
கமிஷனர்கள் ராஜமன்னார், தர்மலிங்கம்இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ்,
சோமசுந்தரம், ஜெயசேகரன், ராமகிருஷ்ணன், பற்குணம், விஜயகுமார், ஜெபராஜ்
மற்றும் பாளை.,போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், கருப்பசாமி,
ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் வடிவேலு தலைமையில் ஆயுதப்படை போலீசாரும்,
ஊர்க்காவல் படை தலைவர் செல்வம், துணை கமான்டர் கனகமணி, கம்பெனி கமான்டர்
மணிபாண்டியன் தலைமையில் ஊர்க்காவல் படையினரும் பங்கேற்று பணிகளை
தீவிரப்படுத்தினர்.
துப்புரவு பணியில் 200 போலீசார்:
நெல்லை கைலாசபுரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகள் 8
பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இப்பணியில் மாநகர ஆயுதப்படை
போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 200 பேர் ஈடுபட்டனர்.
மேலும் பத்திரிகையாளர்கள், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் என சுமார்
100 பேர் கலந்துகொண்டனர்.
முட்செடிகள், குப்பை கழிவுகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினர். மேலும் கீழே
கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகளையும் அகற்றினர். காலை 10.30 மணிக்கு
துவங்கிய பணிகள் மாலை 6.30 மணிவரை தொடர்ந்து நடந்தது.
இதில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் பாதிரியார் ஜான்சன், பாதர்
அந்தோணி குரூஸ், சவுந்திர பாண்டியன்,சரத் கண்ணன், கமால் முஸ்தபா மற்றும்
மாநகராட்சி கவுன்சிலர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமான பெண்கள், பொதுமக்கள்
பலர் பங்கேற்று பணிகளை விறுவிறுப்பாக செய்தனர்.
கண்காணிப்பு தேவை:
>கைலாசபுரம் ஆற்றுப்பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை அடர்ந்து
வளர்ந்த முட்செடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் அந்த இடம் பளிச்என
சுத்தமாக உள்ளது. இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டால் ஆக்ரமிப்பு செய்ய
வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே சுத்தப்படுத்தப்பட்ட அந்த இடங்களை
பாதுகாத்து மரங்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ரமிப்பு அகற்றப்படுமா?
கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் இருந்து சிந்துபூந்துறைக்கு
செல்வதற்கு ரோடு இருந்தது. தற்போது இந்த ரோடு சிலரால் வீடுகள் மற்றும்
தோட்டங்கள் அமைத்து முழுமையாகஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ்
கமிஷனரிடம் கேட்டபோது,மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டால் உடனடியாக
ஆக்ரமிப்புகள் அகற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு தந்து நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார். மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டால்
ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளதால், மாநகராட்சி
நிர்வாகம் ஆக்ரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்ந்து ஆக்ரமிப்புகள் மற்றும் பல்வேறு
கழிவுகளால் மாசுபடுவதை தடுக்கும் கடமை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட
மக்களுக்கு மட்டுமே உண்டு. இதை செய்யத்தவறினால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள்
தாமிரபரணி மற்றொரு கூவமாக மாறிவிடும் என்பது மட்டும் உண்மை. அதற்குள்
மக்களும், அதிகாரிகளும் விழித்துக்கொண்டு தாமிரபரணியை பாதுகாக்க தேவையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
சபாஷ்கமிஷனர்:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்றது முதல் ஹெல்மெட் கட்டாயம்,
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ரோட்டோர ஆக்ரமிப்பு, கார்களில் கருப்பு
பிலிம் அகற்றுதல், ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துதல் போன்ற பணிகளை
தீவிரப்படுத்தியுள்ளார். இதனால் பொதுமக்களில் சிலர் கமிஷனர் மீது
அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பெரும்பாலானோர் இவரது பணியை பாராட்டவே
செய்கின்றனர். தற்போது போலீசார் மூலம் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும்
பணியிலும் கமிஷனர் கருணாசாகர் ஈடுபட்டுள்ளது மக்களிடம் வரவேற்பை
பெற்றுள்ளது.

0 comments

Leave a Reply