எல்கை எழில் மிகு ஆறுமுகநேரியின் எல்கைகளாக தொன்மைச்சிறப்புமிக்க நான்கு ஊர்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கே காயல்பட்டினம் மேற்கே மூலக்கரை தெற்கே வீரபாண்டியன்பட்டினம் வடக்கே ஆத்தூர் எனும் ஊர்கள் ஆகும். ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் காயல்பட்டினம் தென்பாகம் வடபாகம் என்ற நான்கு வருவாய் கிராமங்களின் தொகுப்பே இன்றைய ஆறுமுகநேரி. வடக்கு 8.57 கிழக்கு 78.12 எனும் பாகைகளில் அமைவிடம் உள்ளது. பண்டைக் காலத்தில் கொற்கையைத் தலைமையிடமாகக் கொண்ட குட நாடு என்ற பிரிவில் இவ்வூர் இருந்தது. 1986 வரை திருநெல்வேலி மாவட்டப் பிரிவிலும் இப்போது தூத்துக்குடி மாவட்டப் பிரிவிலும் உள்ளது. ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தனுள் மருதமான வயல்வெளியும் நெய்தலான கடற்கரைப் பகுதியும் திரிந்த (சேர்ந்த) பகுதியாக உவர் நிலமாக ஆறுமுகநேரி அமைந்துள்ளது. சங்க காலத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் வாழ்ந்ததற்கான பானை ஓடுகள் உடைந்த தாழிகள் கிடைக்கின்றன. முற்காலச் சிறப்புகள் உப்பளமாக மண் மேடிட்டுப் போயின. சுனாமி வெள்ளம் போன்ற பேரழிவுகளால் தாமிரபரணி தடம் மாறியது கடல் மண் மேடுகளால் பின் வாங்கிப் போனது. பெயர்க்காரணம் ஆறுமுகனை வழிபடச் செல்வதற்கான வழி மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்தும் பிற குழுக்களிடமிருந்தும் பிரித்துக்காட்டப் பெயர்களை (Name) வழங்கியது போல தாங்கள் வசித்த மண்ணிற்கும் பெயரிட்டுக் கொண்டனர். முற்காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடத்தினர். இயற்கை மீது பற்றுக் கொண்டிருந்தனர். இயற்கையைத் தெய்வமாக வழிபட்டனர். தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு அச்சூழலுக்கேற்பப் பெயரிட்டுக் கொண்டனர். சங்கக்கால இலக்கியமான திருமுருகாற்றுப்படைவரிகள் திருச்செந்தூரைப் போற்றிப் பாடுகின்றனர். திருச்செந்தூர் செந்திலாண்டவரை : ஆறுமுகனை வழிபடச் செல்வதற்கான வழி என்ற பொருள்பட அமையப் பெற்ற சிறப்புமிக்க ஊர் ஆறுமுகநேரி என்று மக்கள் கூறுகின்றனர். ”நெறி” என்றால் ”வழி” எனத் தமிழகராதி இயம்புகிறது. ஆறுமுகனைக் காண்பதற்குச் செல்லும் நெறி (வழி) ஆறுமுகநேரி என்று மருவியுள்ளது என மக்கள் கருதுகின்றனர். ” குமரர்களை வென்று மயில் மேலிலங்கும் சீர்திரு செந்தில்பதி வேலலென்ற அறுமுகன் நேர்வழிப்பாதையென்று ஆறுமுகநேரி பெயர் ஆனதிங்கு” என்று க.தூ. ராவின் பாடல் ஒன்று கூறுகிறது ஜெகவீரபுரம்” வீரபாண்டிய நல்லூர்” ஆத்தூர் ஆற்றுக்கேத் தெற்கே ஆறுகல் தொலைவில் ஆறுமுகநேரி என்ற பேச்சு வழக்கு உள்ளதாக ஆசிரியர் மு.வே.ரா. கூறுகிறார். 1200 ஆண்டுகளுக்கு முன்பு முற்காலப்பாண்டியர் பாணியில் அழகிய சிவன் கோயிலும் அதன் மேற்புறம் எழிலான தெப்பக்குளமும் அமைந்திருந்தது. பிற்கால வீரபாண்டி கட்டபொம்மு இக்கோயில் அருகில் தன்னுடைய நகரா மண்டபத்தை அமைத்திருந்தான். கால வெள்ளத்தில் அச்சிவன் கோயில் அழிந்து போனது. தெப்பக்குளம் பராமரிப்பின்றி தன்னுடைய பழமையான உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறது. இத்தெப்பக்குளத்தில் கீழ்ப்புறப்படிக்கட்டோரத்தில் புடைப்புச்சிற்பமாக சுகாசன வடிவில் தெற்கே பார்த்த வண்ணம் முருகன் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் முன்பு காவடி எடுத்துக்கொண்டு வழிபட்டவாறு ஒரு பக்தனுடைய உருவம் காணப்படுகிறது. முற்காலத்தில் இத் தெப்பக்குளத்தில் நீராடி காவடி எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வூருக்கு ”ஜெகவீரபுரம்” என்ற பெயரும் உள்ளதாக ஆசிரியர் எம்.வி.ஆர்.கூறுகிறார். காயல்பட்டினம் காட்டுமகதூம்ஒலியுல்லா பள்ளியில் உள்ள கல்வெட்டொன்றின் மூலம் ஆறுமுகநேரி ”வீரபாண்டிய நல்லூர்” என்றழைக்கப்பெற்றது அறியலாகிறது. அக்காலத்தில் தற்போதைய குரும்பூர் நல்லூர் குரும்பிலான இராசேந்திர நல்லூர் என்றும் வீரபாண்டியன்பட்டினம் சோணாடு கொண்டான்பட்டினம் என்றும் பாண்டியன்பட்டினம் என்று வழங்கப்பெற்றது. ஆற்றுமுகநகரி . தாமிரபரணி பொதிகை மலையில் தோன்றி நீண்ட தூரம் ஓடிவந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் இரு கிளைகள் (ஓடைகள்) ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினம் கடலில் சென்று கலந்தன. அதன் வழித்தடங்களில் ஒன்று தற்போது மத்திய உப்பு இலாகா அலுவலகத்திற்கு வடபுறம் அமைந்துள்ளது. மற்றொன்று சீனந்தோப்புக்குத் தென்புறம் வழியாக காயல்பட்டினம் ஓடக்கரைக்கு முன்பாகச் சென்றது. ஆற்று முகத்துவாரத்தில் அமைந்த நகராக விளங்கியதால் ஆற்றுமுகநகரி காலவெள்ளத்தில் ஆறுமுகநேரி ஆகத்திரிபு பெற்றது எனலாம். ஆறு என்பது எண் வரிசையில் ஆறினையும் தாமிரபரணி ஆற்றின் ஆற்றையும் குறிக்கும் தன்மையுடையது. முகம் என்பது மனிதனுடைய முகத்தையும் முகத்துவாரம் என்ற பொருளையும் தரவல்லது. நேரி நெறி என்பது வழியைச் சுட்டுகிறது நேரி என்பது நகரியின் திரிபாகலாம். திருநள்ளாறு - ஆற்றிற்கு இடையே அமைந்த ஊர்ப்பெயராகும். இதில் நள் என்பது இடையே என்பதாகும். ஆற்றினிடையே என்ற பொருளில் திருநள்ளாறு அமைந்தது. இவ்வாறு ஆற்றின் அருகே முகத்துவாரத்தில் அமைந்த நகரம் ஆறுமுகநேரி ஆகும். ஆறுமுகநேரி அருகே ஆற்றினடிப்படையில் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள் ஆத்தூர் காயல்பட்டினம் மூலக்கரை ஆகும். ஆற்றின் பெயரால் ஆத்தூர் கடலும் ஆறும் கலக்கும் இடம் காயல் எனப்படும். அடினடிப்படையில் காயல்பட்டினம் - ஆற்றின் கரையின் ஒரு பகுதி மூலக்கரை. இவ்வாறு சங்கத்தமிழ் பெயர்களாக ஊர் பட்டினம் கரை என்ற பெயர்களிடையே நகரி என்ற பெயரும் அமைந்துள்ளது எனக் கருத இயலும். ஆறுமுகன்+ஏரி ஆறுமுகன் பெயரில் ஏரி ஒன்று முற்காலத்தில் இருந்ததன் காரணமாகவும் ஆறுமுகன்+ஏரி - ஆறுமுகநேரி என்று ஆகியிருக்கலாம் (சான்று - நான்கு+ஏரி=நான்குநேரி) ”எண்ணென்ப ஏணை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணையும் எழுத்தையும் பெருமை செய்யும் திருவள்ளுவரின் குறளுக்கொப்ப எண் ஆன ஆறு என்றும் இயற்கையான ஆறு என்றும் இவ்ஊரின் பெயர் தொடங்கியுள்ளது சிறப்பியல்பாகும் தாமிரபரணியும் ஆறுமுகநேரியும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் நிலவியல் அமைப்பு மற்றும் அரசியல் பண்பாடுகள் பற்றி அறிவதற்குப் பெருந்துணையாக நிற்பவர் தாலமி (கி.பி. 119-161) எகிப்து நாட்டைச் சேர்ந்த பேரறிஞர் ஆவார். கணிதம் புவியியல் துறையில் வல்லுநரான அவருடைய ஆய்வுக்குறிப்பில் தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆறும் சிறப்பு வாய்ந்த கொற்கைத் துறைமுகம் இடம் பெற்றுள்ளது. தாலமியின் குறிப்பின்படி தாமிரபரணி ஆறு ”சோலன்” என்றழைக்கப்பெற்றது. ஏரலிலிருந்து ஒரு கிளை பிரிந்து ஆறுமுகநேரியின் பகுதி வழியாக ஓடிச்சென்று காயல்பட்டினம் கடலில் சங்கமித்தது என்கிறார். செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட பல அரிய படங்களை ஆய்வுச்செய்து தொன்மச் சிறப்புகள் கண்டறியப் பெற்றுள்ளன. இணையத்தளத்தில் (SCIENTIFIC CORRESPONDDENCE) என்ற பகுதியில் கொற்கைத்துறைமுகம் பற்றியப் புதிய கண்டுபிடிப்புகள் (RECONSTRUCTION OF THE ANCIENT PORT, KORKAI IN THOOTHUKUDI DISTRICT OF TAMILNADU) என்ற கட்டுரையும் இணைக்கப்பெற்ற படங்களும் தாலமியின் குறிப்புகளுக்குத் துணையாக அமைந்துள்ளன. தாமிரபரணியின் ஆற்றின் முற்கால ஓடு பாதையின் தடயங்கள் மூலம் அது ஓடிய காலம் நிலவியல் ஆய்வின் வழி உறுதி செய்யப்பட்டுள்ளன. கி.பி.8 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை ஆறு பிரிந்து ஆறுமுகநேரியின் ஒரு பகுதியில் ஓடி காயல்பட்டினம் அருகே கடலில் சென்று கலந்தது. இவ்வாறு ஆறு ஓடிய ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் தலைசிறந்த துறைமுக வணிக மையம் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரமாக மக்கள் வாழ்ந்த இடங்களுக்கான தடயங்கள் கட்டடங்களின் இடிபாடுகள் அறுத்தச் சங்குகள் முத்துச் சிப்பிகள் மற்றும் தானியங்கள் பொருட்களைச் சேமித்து வைத்திடப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் உறைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கப்பலும் சிறு படகுகளும் வந்து சென்ற வழித்தடம் இப்போது “கப்பலோடிய கசம்“ என்றழைக்கப்படுகிறது. மேலும் சங்க காலமான கி.மு. 180 - கி.பி. 290 இதற்கு முற்பட்ட காலத்தின் பெரிய அளவிலான செங்கற்கள் (இப்போது கொற்கையில் கிடைப்பது போல) ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆழிப்பேரலை (சுனாமி)யாலும் கடல் பின் வாங்கியதாலும் பொலிவிழந்து ; அழிந்து மண்மேடிட்டுப் போயின. ஏலங்கான்பட்டினம் - இ(ஏ)லங்கத்தம்மன் 16.06.2003 இல் கொட்டமடைக்காடு (கோட்டை இருந்த இடம் கோட்டைமேடு திரிபு பெற்றது) சீலாக்காடு (முத்து குளிக்கப்பட்ட இடம் சிலாபக்காடு இவ்வாறு திரிபு பெற்றது) பகுதியில் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டக்கோயிலின் சிதறுண்டப் பாகங்களும் ஐம்பொன்னாலான நடராசர் உமாதேவி விஷ்ணு துர்க்கை மற்றும் பூசைக்கான உபகரணங்களும் கண்டறியப்பட்டன. இவற்றின் மூலமும் பாண்டியர் கால மீன் முத்திரைக்கல் மூலமும் இவ்விடம் தேரோடிய வீதிகளுடன் மிகப்பெரிய வணிகச் சந்தையாக இருந்தது என்பதை அறியலாம். தாலமியின் குறிப்பின்படி கடற்கரைப் பகுதியில் இருந்த ஏலங்கான் பட்டினம் வணிகச் சந்தை இதுவே. கொற்கைக் குடா என்ற பகுதிகளுக்குள் காயல்பட்டினம் ஆறுமுகநேரி இருந்துள்ளன. காயல்பட்டினம் ஆறுமுகநேரி இரு ஊர்களுக்கும் எண்ணற்றத் தொடர்புகள் இருந்தன. தற்போது ஆறுமுகநேரிப் பகுதியில் மட்டும் அ(ஏ)லங்கத்தம்மன் வழிபாடு பல இடங்களில் உள்ளன. இவ்வழிபாடு தொன்மச் சிறப்புமிக்கதாகும். ஏலங்கான் வணிகச் சந்தையில் (கொற்கையில்) முற்காலப் பாண்டியர்களால் வழிபடப் பெற்ற தெய்வம் இ(ஏ)லங்கத்தம்மன் ஆகும்.
|
You Are Here: Home» Geographical Status » வரலாறு
0 comments