ஆத்தூர் பகுதியில் வெப்பம் குறைந்து பலத்த சூறைக்காற்று புழுதி வீசி வருகிறது.
ஆத்தூர் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை கோடை வெயில்
கொளுத்தி வந்தது. இப்பகுதியில் ஏற்கனவே நான்கு கட்டமாக கோடை மழை
பெய்திருந்தாலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் மீண்டும் ஒருமுறை வருணபகவான்
கருணை காட்ட மாட்டாரா என ஆத்தூர் பகுதி மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இருப்பினும் ஆத்தூரில் மழை சீசனிலேயே எதிர்பார்த்த அளவுக்கு போதிய மழை
இல்லாததால் இப்பகுதியில் நெல் சாகுபடிப் பணிகள் பாதிப்படைந்தன. இந்த
நிலையில் மழை சீசன் முடிந்து கோடை துவங்கியதும் வாட்டி எடுத்த வெயிலால்
மக்கள் வியர்வையில் குளித்து வந்தபோதும், மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கி
நான்கு முறை விட்டு விட்டு பெய்த மழையால் பொதுமக்கள் ஓரளவு ஆறுதல்
அடைந்திருந்தனர்.இதற்கிடையில் மழை முடிந்து பல நாட்களுக்குப்பின் ஆத்தூர்
சுற்றுப் பகுதியில் கடந்த மாதம் திடீரென நல்ல காற்று வீசியது. சுமார் ஒரு
மணி நேரம் நீடித்த காற்று படிப்படியாக சூறைக்காற்றாக மாறியது. இடையிடையே
மின்னல் தாக்கியதோடு வானமும் தொடர்ந்து மேகமூட்டத்துடனேயே இருந்ததால் மழை
வருமென மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சூறைக்காற்றால் தெரு முழுவதும்
புழுதி பறந்ததோடு, வீடுகளுக்குள்ளும் குப்பை குவிந்தது.இந்நிலையில்
இப்பகுதியில் தற்போது வெப்பத்தை தொடர்ந்து தணிக்கும் வகையில் பலத்த
சூறைக்காற்று புழுதி கிளப்பி வருவதால் ஓரளவு குளிர்ச்சியான சூழ்நிலை
நிலவுகிறது. இருப்பினும் சுழல் காற்று கிளப்பும் தூசிப்புயலால்
ஆத்தூர்-ஆறுமுகநேரி ரோட்டில் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
0 comments