ஆறுமுகநேரி:திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகும்
கருப்பட்டி விலை உயர்வடைந்துள்ளது.திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில்
திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டணம், அடைக்கலாபுரம், மூலக்கரை,
ஆறுமுகநேரி பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. பனைமரத்தில் இருந்து
கிடைக்கும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இது மருந்து
பொருளாக மட்டும் அல்லாது கிராமப் பகுதிகளில் காப்பிக்கும் அதிக அளவில்
பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பனை ஏறுவதற்கு சரியாக ஆட்கள் கிடைக்காத காரணத்தினால்
பனை ஏறும் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பனை
மரங்கள் வெட்டப்பட்டு பிளாட்டுகளாக மாறி வருகின்றன. தற்போது பனை ஏறும்
தொழில் நடக்கும் இடங்களில் கிடைக்கும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்குவதை
விட பதனீராகவே விற்பனை செய்வதில்தான் அதிக லாபம் கிடைக்கிறது என பதனீராக
விற்பனை செய்து விடுகின்றனர். மிஞ்சுகின்ற பதனீர்தான் கருப்பட்டியாக
காய்ச்சப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு புதிய கருப்பட்டி வருகையின் போது இருந்ததை விட தற்போது
கருப்பட்டியின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு
10 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.700 முதல் ரூ.750 வரை விற்பனையானது. ஆனால்
தற்போது ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனையாகி வருகிறது. வழக்கமாக பதனீர்
சீசன் போது கருப்பட்டியின் விலை குறையும். ஆனால் தற்போது கருப்பட்டி விலை
உயர்ந்துள்ளது காப்பி பிரியர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
0 comments