ஆறுமுகநேரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆறுமுகநேரி எல்.எப்.ரோடு மெயின்பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சீனிவாசன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று காலை கடை ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அப்போது கடைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி கடையின் உரிமையாளர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் தனது கடைக்கு வந்து பார்த்தார். கடையிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
கொள்ளையர்கள் நள்ளிரவு நேரத்தில் வந்து, சீனிவாசனின் கடையை உடைத்து உள்ளே புகுந்து, லாக்கரை உடைத்து அதிலிருந்த 25பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ15 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிதுரை, ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த நகைக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
கடையில் எவ்வளவு நகைகள் இருந்தது? எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன? கடை உடைக்கப்பட்டிருப்பதை முதலில் பார்த்தது யார்? என்று கடை உரிமையாளர் சீனிவாசனிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.
நகைக்கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ள மெயின்பஜார் பகுதியில் நகைக் கடையை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் ஆறுமுகநேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-நன்றி மாலை மலர்

0 comments