காயல்பட்டினம் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்: அமைதியாக நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் புறப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம் காயலபட்டினம் வழியாக சனிக்கிழமை மாலை அமைதியாக நடைபெற்றது.
ஆறுமுகனேரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்து விழாவினை இந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஆறுமுகனேரியில் 20வது ஆண்டாக இந்து எழுச்சி திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி ஸ்ரீசோமநாத சமேத ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு 11அடி வீர விநாயகர் சிலை பஜார் ஸ்ரீசெந்தில் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஆறுமுகனேரியில் உள்ள 25 அம்மன் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இவை தவிர மெயின் பஜார், பாரதி நகர், முத்துகிருஷ்ணாபுரம்,ராஜமன்னியபுரம், மடத்துவிளை, வடக்கு சுப்பிரமணியபுரம் , சீனந்தோப்பு,பூவரசூர், மேலத் தெரு, நடுத்தெரு, இலங்கத்தம்மன் கோவில் தெரு, பெருமாள்புரம், கமலா நேரு காலனி, கீழநவ்வலடிவிளை,காணியாளர் தெரு, பத்ரகாளி அம்மன் கோவில் மற்றும் எஸ்.எஸ்.கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 அடி முதல் 7 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர்.
வெள்ளிக்கிழமை வீர விநாயகர் ஊர்வலமாக 25 அம்மன் கோவிலிற்கும் பவனி நடைபெற்றது.
சனிக்கிழமை மதியத்திலிருந்து ஆறுமுகனேரியில் பல்வேறு இடங்களிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும், நாசரேத், குரும்பூர் பகுதியிலிருந்து 15 விநாயகர் சிலைகளும், சோனகன்விளை, மூலக்கரை, ராணிமகராஜபுரம், காணியாளன்புதூர் மற்றும் கூர்ந்தாவிளை, வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், தலைவன்வடலி மற்றும் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் ஆறுமுகனேரி பஜார் ஸ்ரீசெந்தில் விநாயகர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்து அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மங்களகுறிச்சி முத்துசுவாமி அடிகளார் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
துவக்க விழாவிற்கு இந்து முன்னணி நகர தலைவர் ஜி.ராமசாமி தலைமை வகித்தார்.இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.மல்லிகா வரிஷினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் துணை தலைவர் காந்தி என்ற சண்முக சுந்தரம், நகர் நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், பக்த ஜன சபை செயலாளர் பி.கே.எஸ்.கந்தையா, வியாபாரிகள் ஐக்கிய சங்கம் தலைவர் த.தாமோதரன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சு.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொ்டனர்.
4.14மணிக்கு துவங்கிய ஊர்வலம் காயல்பட்டினம் காந்தி வளைவை 5.34மணி அளவில் கடந்தது.அதன் பின்னர் காயல்பட்டினம் சிவன் கோவில் விநாயகர், உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு விநாயகர்களுடன் இணைந்து ஊர்வலம் விசாலட்சுமி அம்மன் கோவில் தெரு வழியாக சென்று மன்னராஜா கோவில் தெருவில் உள்ள விநாயகருடன் பூந்தோட்டம் வழியாக ஓடக்கரை சென்று அங்குள்ள விநாயகருடன் ஊர்வலம் 6.45க்கு காயல்பட்டினத்தை கடந்து திருச்செந்தூருக்கு விஜர்சனத்திற்கு சென்றது.ஊர்வலத்தின் முன்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து ஊர்வலம் கூடவே சென்றார்.
தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமி துரை வேலு தலைமையில்
4துணை கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



0 comments