சுதந்திரப்போராட்டம் | ||||||||||||||||||||||||||||||||
நம்முடைய இந்தியத்திருநாட்டில் வெள்ளையர் தங்களுடைய ஆட்சியை 18 19 ஆம் நூற்றாண்டுகளில் நம்முடைய ஒற்றுமையின்மையையும் சுயநலத்தையும் பயன்படுத்திக்கொண்டு வேரூன்றினார். அந்நாள் முதலாக ஆங்காங்கே விடுதலை வீரர்கள் தோன்றி நாட்டு விடுதலைக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர். பொருட்தியாகம் உயிர்த்தியாகம் என தியாக வேள்வியில் புகுந்தனர். இந்த நூற்றாண்டில் “கத்தியின்றி ரத்தமின்றி“ அகிம்சா முறையினைக் காட்டித்தந்த மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு நேதாஜி உள்ளிட்ட பல வீரத்திருமகன்கள் தலைமையில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து நம்முடைய நாடு 15.8.1947 இல் விடுதலை பெற்றது. வெள்ளையரின் ஆதிக்கம் வேருடன் அழிந்தது. அச்சுதந்தித்திற்காகத் தங்களுடைய உடல் பொருள் உயிர் ஆகியவற்றைத் தியாகம் செய்தவர்கள் இலட்சக்கணக்கிலாவர். நம்முடைய திருச்செந்தூர்த் தாலுகா சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது. குறிப்பாக ஆறுமுகநேரி என்ற சிற்றூர் தலைமையேற்று முதலிடம் வகித்தது. முப்பத்து மூன்று தியாகப்பெருமக்களை ஈன்று நாட்டிற்காகக் கொடுத்துள்ளது என்பதை எண்ணி பெருமை கொள்வோம். இக்காலநிலை இக்காலத்தில் வாழுகின்ற மாணவர்கள் ; இளைஞர்களுக்கு இந்நாடடின் விடுதலையைப் பெறப் போராடியவர்களைப் பற்றிய செய்தியும் வரலாற்றுண்மைகளும் கிடைப்பதில்லை. இவ்வூரிலே பிறந்து வளர்ந்தவனுக்கு இவ்வூரின் தியாக வரலாறு தெரியாமல் இருப்பது தவறு. தூக்குமேடை வரை சென்று வந்த டி.வி.காசிராஜன், இராஜகோபால் இருவரை எத்தனை பேர் அறிவார்கள்? திரைப்படத்தில் மூன்று மணி நேரம் போராளியாக நடிக்கின்ற நடிகர் மீது கொண்டுள்ள பற்று இந்நாட்டிற்காகப் பல ஆண்டுகள் சிறைவாசமும் உயிர்த்தியாகமும் செய்தவர்கள் மீது எந்நாள் திரும்பும்? சில வரலாறுகள் கால வெள்ளத்தில் மாற்றமடைந்து விடுகின்றன. தலைவர்களாக சிலபேர் இருந்தார்கள் தொண்டர்களாக பல பேர் இருந்தார்கள். அந்தத்தியாக மறவர்களுடைய பெயர்களும் வரலாறும் மறக்கப்படாமல் இக்காலத்திலும் எதிர் காலத்திலும் கல்வெட்டு போல ஒளிர வேண்டும். அரசியல் மேடைகளில் முழங்கும் இந்நாள் சில அரசியலாளா்கள் போலன்றி நாடடின் விடுதலைக்காக சொந்த வசதிகளையும் பொருளையும் வியாபாரத்தையும் தொழிலையும் உறவுகளையும் உடல்நலத்தையும் இழந்தவர்கள் அந்நாளில் இருந்தனர். இறவாப்புகழ் இவ்வூரில் பிறந்தேன் வளர்ந்தேன் இருந்தேன் இறந்தேன் என்றில்லாமல் இறவாப் புகழெய்திய மாவீரர்கள் என்னென்ன தியாகங்களைச் செய்தார்கள்? எலும்புகள் நொறுங்கும்படி அடிவாங்கியோர் யாவர்? வீதிகளில் அடிபட்டும் மிதிபட்டும் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டும் தங்களுடைய நிலை மாறி சிறையில் வாடியவர்கள் யார்? என்பதையும் மக்கள் அறிய வேண்டும். தங்களுடைய சொத்துகளையும் வருமானங்களையும் சுதந்திரப் போராட்டதால் இழந்து வறுமைப்பட்டு ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு ஆதரவளிக்க முடியாமலும் தாம் பெற்றப் பிள்ளைகளைக் கவனியாமலும் கல்வியின்றி பிழைக்க வழியின்றி குடும்பத்தைத் தவிக்கவிட்ட தியாக வரலாறுகளை அறிந்து கொள்ள வேண்டும். மறைமுக உதவி போராட்டக் காலத்தில் களத்தில் இறங்காமல் மறைமுகமாக இருந்து பல அரிய சேவைகளையும் தியாகங்களையும் செய்தவர்கள் பலருண்டு. வெள்ளையருக்கு பயம் கொள்ளாமல் போராட்ட வீரர்களை மறைத்து வைத்து உணவு உடை பணம் கொடுத்து அதனால் அரசின் துன்புறுத்தல்களுக்குள்ளானோர் பலர்.ஆறுmமுகநேரி மண்ணின் மைந்தர்களான விடுதலைப் போராட்ட வீரர்களை பொதுமக்களுக்கு இனம் காட்ட வேண்டியக் காலச்சூழலில் உள்ளோம். இவ் ஏடு மூலம் சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஆறுமுகநேரியின் தலைசிறந்த பங்கேற்பினை அறிந்து கொள்வது அந்தத்தியாகப் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கங்களாகும். திருச்செந்தூர் தாலுகாவில் நடைபெற்ற இயக்கங்கள் ஆறுமுகநேரிக்கும் உரியனவாகும். தியாகி “இந்தியா“ இன்று சுதந்திர இந்தியாவாக உலக அரங்கில் மக்களாட்ச்சிக்குச் சான்று கூறுமளவில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. அதற்குரியவர்கள் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களாவர். கைமாறு கருதாச் சான்றாண்மையே தியாகம். தியாகி என்ற சொல்லில் அதன் பொருள் பொதிந்து உள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியாவின் தென்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அவ்வர்ப்பணிப்பால்தான் இன்று நாம் சுதந்திரத்தின் இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தியாகம் அகிம்சை என்ற அறவழியான சத்தியாகிரகம் எனும் மாபெரும் சக்தியை உள்ளத்தில் நிறுத்திப் போராட்டக் களத்தில் நின்று பல இன்னல்களை அனுபவித்த விடுதலை வீரர்கள் பிறந்த மண் இது. அகிம்சை தகாது என்று தீவிரவாதத்தில் குதித்த மண்ணின் மைந்தர்களையும் கொண்ட ஊர் இது. வெள்ளையருக்கு தங்களுடைய ஆட்சி எல்கைக்குட்பட்ட வரைபடத்தில் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் மூலையில் அமைந்திருந்த திருச்செந்தூர் தாலுகா அடிக்கடி தலைவலியைக் கொடுத்து வந்தது. அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமையிடமாக மூளையாக ஆறுமுகநேரி எனும் சிற்றூர் செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொண்டது மாவட்ட நிர்வாகம். ஆறுமுகநேரி மக்கள் தொகை சில ஆயிரமாக இருந்த அக்காலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களைச் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டனர். “வந்தேமாதர மென்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் எந்த மாருயி ரன்னயைப் போற்றுதல் ஈனமோ? அவமானமோ?“ என்று பாரதியின் பாடலுக்கிணங்க ஆர்ப்பரித்து எழுந்தனர்.
|
You Are Here: Home» Freedom Struggle » சுதந்திரப்போராட்டம்
0 comments