ஆறுமுகனேரி அருகில் மூலக்கரை கிராமத்தில் பாத்திர வியாபாரி வீட்டில், வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி விளக்குகள் உள்ளிட்ட ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
ஆறுமுகனேரி அருகிலுள்ள மூலக்கரை கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாஸ்கர்(41).இவர் குரூம்பூரில் பாத்திரக்கடை வைத்துள்ளார்.அங்கு குடும்பத்துடன் தங்கி வருகிறார்.இவரது பூர்வீக வீட்டிற்கு ஊரில் நடைபெறும் விசேஷ ங்களின் போது மட்டும் வந்து தங்கி செல்வார்.இவர் கடந்த 13ஆம் தேதி இங்கு நடைபெற்று கோவில் விழாவிற்கு வந்து விட்டு திரும்பி வீட்டை பூட்டி சென்று விட்டார்.
19ஆம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்றுள்ளார். படுக்கையறையில் உள்ள அலமாரியில் வைத்திருந்த தலா 100கிராம் எடையுள்ள வெள்ளி காமாட்சி விளக்குகள் இரண்டும் மற்றும் 100கிராம் வெள்ளி தாம்பளத்தட்டு ஒன்றினையும் யாரோ திருடிச் சென்றதை அறிந்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆறுமுகனேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ந.ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திர நாயர், கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிதுரைவேலு, திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன் மற்றும் ஆறுமுகனேரி ஆய்வாளர் பார்த்தீபன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மூலக்கரை கிராமத்தில் மேலும் சில வீடுகளில் திருட முயற்சி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அவர்கள் அனைவரும் வெளியூரில் இருப்பதால் அவர்கள் வந்தால்தான் மேல் விபரம் தெரியவருமென போலீஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments