கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு உடன்குடியில் தென்னை ஒட்டு சேர்க்கை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் உடன்குடி பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.அவர்கள் வேளாண் பெருமக்களிடமும் வேளாண் அலுவலர்களிடம் விவசாயம் பற்றிய தங்கள் சந்தேகங்களை கேட்டு விபரம் அறிந்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உடன்குடியில் உள்ள தென்னை ஒட்டு சேர்க்கை நிலையத்தில் நெட்டை மற்றும் குட்டை விதை நெற்றுகள் உற்பத்தி செய்யும் முறையினை நேரடியாக பார்வையிட்டு பயிற்சி பெற்றனர் கல்லூரி மாணவிகள்.
பயிற்சியின் போது மகரந்தம் சேகரித்தல், பெண்பூவில் மகரந்த பொடியை கொண்டு ஒட்டு சேர்த்தல், நெற்றுகள் அறுவடை செய்தல் ஆகிய முறைகளை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர்.
உடன்குடி உதவி வேளாண் இயக்குனர் த.பாரதி, தென்னை ஒட்டினச் சேர்க்கை வேளாண் அலுவலர் பி.அலாய் பெரண்டா மற்றும் உதவி வேளாண் அலுவலர் பா.மகேந்திர குமார் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.தென்னைக்கு உரமிடுதல், சிகப்பு கூன் வண்டு, தஞ்சாவூர் வாடல் நோய், காண்டாமிருக வண்டு அழித்து பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி பயிற்சியில் விளக்கப்பட்டது. பயிற்சியில் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஆனந்தி அனுஷ்யா, பிரதிபா, சாந்தி, ஷைனி, ஸ்டெல்லா மற்றும் உமா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments