தீபாவளிக்கு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கடும் நெரிசல்:கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, 483 அரசு விரைவு பேருந்துகள் உட்பட அனைத்து கழகங்களில் இருந்தும், 2,300க்கும் மேற்பட்ட பேருந்து கள் இயக்கப்படுகின்றன. மேலும், 200க்கும் மேற்பட்ட கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக, 1,500 பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் வகையில், தாக்குப்பிடிக்க கூடியதாக பேருந்து நிலையம் உள்ளது. இடப்பற்றாக்குறை நீடிப்பதால், நிலைமையை சமாளிக்க, பகல் முழுவதும் பேருந்து நிலையத்தில், 'ஐடியல்' ஆக நிற்கும், அரசு விரைவு பேருந்துகள், கோயம்பேடு காவல் நிலையத்தையொட்டி உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இருப்பினும், வார இறுதி நாட்களில் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெரிசலில் சிக்குகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நவ., 6ம் தேதி முதல் அனைத்து பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நெரிசல் உச்சத்திற்கு செல்லும். இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.
போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேருந்து நிலையத்தில் இருந்து, இரண்டு வழிகளில் பேருந்துகள் வெளியேற ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பேருந்துகளுக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் பின்புறம் இடம் ஒதுக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகளை, பேருந்து நிலையத்தின் எதிர்புறம் தேர்தல் ஆணையம் முன்பு உள்ள காலி இடத்தில் நிறுத்தி இயக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். ஆம்னி பஸ்களை பொறுத்தவரை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டி செல்லும் சாலை வழியாக, பூந்தமல்லி சாலையை அடையும் வகையில் திருப்பி விடுவோம். இருப்பினும், சிறப்பு பேருந்துகளை நெரிசல் இன்றி இயக்குவதற்கு ஏற்ப, செயல்திட்டம் வகுக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி தீர்வு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments