ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» குலசை » குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பக்தர்கள் விரதமேற்பு.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13–ந் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் நேற்று விரதம் கடைபிடிக்க தொடங்கினர்.
கொடியேற்றம்
உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 13–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10–ம் திருநாளான அடுத்த மாதம் 22–ந்தேதி (வியாழக்கிழமை) இரவில் சிதம்பரேசுவரர் கோவில் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
இதில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகின்றனர். விழாவையொட்டி 60 நாட்கள், 41 நாட்கள், 11 நாட்கள் என பக்தர்கள் விரதம் கடைபிடிக்க இருக்கின்றனர்.
விரதம் தொடங்கினர்
தசரா திருவிழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, அங்கு துளசி மாலை வாங்கி கடலில் புனித நீராடினர். பின்னர் செவ்வாடை அணிந்து, கோவிலில் அம்மன் பாதத்தில் துளசி மாலையை வைத்து வழிபட்டனர்.
கோவில் அர்ச்சகர், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு துளசிமாலையை அணிவித்தார். பின்னர் பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்று, அங்குள்ள கோவிலின் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இரவில் தங்குவார்கள்.
தசரா திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, தங்களது கைகளில் காப்பு கட்டுவார்கள். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், ராஜா, ராணி, அனுமார், குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, 10–ம் திருநாளில் கோவிலில் காணிக்கையை வழங்குவார்கள். இதேபோன்று ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்தும், ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து கோவிலில் வழங்குவார்கள்.

0 comments

Leave a Reply