திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 11–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஆவணி திருவிழா கொடியேற்றம்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடிப்பட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்திகளுக்கும் வீதி உலா சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதிகாலை 5.15 மணிக்கு கோவில் 2–ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய மு.பரத் பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்தில் எண்ணெய், தைலம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமர பீடத்தில் தர்ப்பை புற்கள், வண்ண மலர்கள், பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை சுப்பிரமணியன் தம்பிரான் சுவாமிகள், கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டி நாடார், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கோபால், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மேலாளர் அய்யாபிள்ளை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், அலுவலர்கள் வெங்கடேசன், சிவா, தொழில் அதிபர்கள் ஆர்.ராமகிருஷ்ணன், ரமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11–ந்தேதி, தேரோட்டம்
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
7–ம் திருநாளான 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி சிவப்பு நிற பட்டு அணிந்து, சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 8–ம் திருநாளான 9–ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மதியம் பச்சை நிற பட்டு அணிந்து பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10–ம் திருநாளான 11–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இஃண ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா செல்லும்போது, சுவாமியை தண்டாயுதம் மூலம் தூக்கி செல்வார்கள். கோவிலுக்கு தேவையான ரூ.5 லட்சம் மதிப்பிலான 13 தண்டாயுதங்களை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா முத்துபட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் எஸ்.ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து கோவிலில் உபயமாக வழங்கினார். அதனை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் மு.கோமதி, உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபன், மேலாளர் அய்யாபிள்ளை, ஸ்தலத்தார் சபை தலைவர் குமார், தானாபதி அய்யர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0 comments