கருவுற்ற தாய்மார்களின் உடல் நலனைப் பேணும் வகையில் 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், எனது தலைமையிலான அரசு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருச்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடியையும்; அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும், வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவற்றையும்; கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம்.
ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மருந்துகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இது வரை அறிவித்த திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேலும் சிறந்து விளங்கவும், அதன் மூலம் தரமான உயர்தர மருத்துவச சேவை தங்கு தடையின்றி, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவும், ஒளிபடைத்த தமிழகம் உருவாகவும் வழிவகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
0 comments