சென்னை, புது வண்ணாரப்பேட்டையில் திருமண வீடு ஒன்றில் ரூ. 2 லட்சம் மொய்ப் பணம், பரிசுப் பொருள்கள் திருடப்பட்டன.இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவொற்றியூர், சாத்தங்காட்டு சேஷாசல கிராமணி தெருவைச் சேர்ந்தவர் வி.இன்பநாதன்.
இவரது சகோதரி மகள் மெர்லின் கோமதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி அருகே உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், மணமகள், மணமகன் குடும்பத்தினர் குழுவாக புகைப்படம் எடுத்தனர். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அளிக்கப்பட்ட மொய்ப் பணம், பரிசுப் பொருள்கள் அடங்கிய ஒரு பையை, மேடையின் கீழே ஓரிடத்தில் வைத்தனர்.
புகைப்படம் எடுத்த பின்னர் அவர்கள் பையைத் தேடினர். அப்போது அந்தப் பை திருடப்பட்டிருப்பதை அறிந்து இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments