கோவில்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியில் பொதுமக்கள் பிள்ளையார்கோயில் அமைத்து வழிபாடு நடத்தினர். கோவில்பட்டி நகராட்சியில் 34வது வார்டு கருணாநிதிநகர் முதல் தெருவை பயன்படுத்தி அப்பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகளுக்கு பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இத்தெருவின் மையப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத்தொட்டி அமைந்துள்ள பகுதியில் ல் பலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் குறிப்பிட்ட பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கருணாநிதி நகர் முதல் தெரு முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க அதிகாரிடம் மனுச்செய்தும் பலனில்லை என்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தொட்டியின் பின்புறம் பிள்ளையார் கோயில் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கினர். தொடர்ந்து மேடைகட்டி அதன்மீது விநாயகர் சிலையையும் நிறுவினர். இதுகுறித்து ஒருசிலர் பொதுமக்கள் கோயில் கட்டுவதன் பேரில் ஆக்கிரமிப்பு செய்வதாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரச்னைக்குரிய இடத்திற்கு நகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் பார்வையிட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் அமைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனினும் பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தில் விநாயகர் சிலையமைத்து வழிபாடுகளும் மேற்கொண்டனர். தொடர்ந்து 34வது வார்டு கவுன்சிலர் ஏஞ்சலா சின்னத்துரை தலைமையில் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து கமிஷ்னரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் அமைப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தவறான நடைமுறையாகும் என்பதால் கோயில் அமைக்கக்கூடாது என்று கூறினார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சுகாதாரம் இல்லை என்றும், அப்பகுதியை சேர்ந்த பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்காமல் திறந்தவெளி கழிப்பிடமாக குறிப்பிட்ட இடத்தை பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அமைத்த கோயிலை ஆக்கிரமிப்பு எனக்கருதினால் குடிநீர் தொட்டியையும் சேர்த்து அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கமிஷ்னர் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மட்டும் தெரிவிக்க வேண்டும், சுகாதாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷ்னர் தெரிவித்ததையடுத்து திரும்பிச் சென்றனர். கோவில்பட்டியில் சுகாதாரத்தை பாதுகாக்க ரோட்டில் விநாயகர் கோயில் உருவாக்கி, கோரிக்கையை வலியுறுத்தி கமிஷ்னரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
You Are Here: Home» arumuganeri , ஆறுமுகநேரி » தங்களுடைய பகுதியைச் சுத்தமாக்க பிள்ளையார் சிலையை வைத்து கோயில்கட்டிய மக்கள்
0 comments