ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாகத் தொடங்கப்பட உள்ளன



தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் நிறைவு விழா அக்டோபர் 19-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் நிறைவு விழா அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
 இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்அதுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சு. அமிர்தஜோதி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெல்லா, அனைத்துத் துறை அலுவலர்கள், வெள்ளிவிழாக் குழு உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
 நிறைவு விழாவையொட்டி, தொடக்க நிகழ்ச்சியாக அக்டோபர் 19-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி நகரில் ஐந்து இடங்களில் இருந்து 10 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பசுமை ஓட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஒன்று சேர்ந்து வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களை நினைவு கூறும் வகையில் கலை வடிவங்களை அமைக்கின்றனர்.  தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட நலக்குழு திருமண மண்டபத்தில் 19-ம் தேதியில் இருந்து பத்து நாள்களுக்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 21-ம் தேதி காலை 50 வாகனங்களில் தூத்துக்குடி மாவட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறுகின்றன. 19,20,21 ஆகிய மூன்று நாள்களில் மெல்லிசை கச்சேரி, திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, செல்லப்பிராணிகள் கண்காட்சி, மலர் மற்றும் பழக்கண்காட்சி, பாரம்பரிய உணவுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவை நடைபெறுகிறது.
 வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
 மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

0 comments

Leave a Reply