ஆறுமுகநேரியில் நேற்று காலை அரசு பஸ் பைக் மோதிய
விபத்தில் கணவன் மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் பரிதாபமாக
பலியாகினர். ஆறுமுகமங்கலம் கோயில் கொடைவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பும்
போது இந்த சோக சம்பவம் நடந்தது.
இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: ஆறுமுகநேரி அருகேயுள்ள
அடைக்கலாபுரம் பிலோமிநகரைச் சேர்ந்தவர் சேசு மகன் அந்தோணிசெல்வராஜ்(28).
திருச்செந்தூரில் பாஸ்ட்புட் கடை நடத்திவந்தார். இவரது மனைவி சகிலா(26).
இவர்களது மகன் ரிஷிலன்(2). நேற்று முன்தினம் ஆறுமுகமங்கலம் சுடலைமாடசுவாமி
கோயில் கொடை விழா நடந்தது. இந்நிலையில் நேர்த்திகடன் செலுத்துவதற்காக
அந்தோணிசெல்வராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆறுமுகமங்கலத்திற்கு பைக்கில்
சென்றுள்ளார். நேற்று காலை ஆறுமுகமங்கலத்தில் இருந்து பிலோமிநகருக்கு
பைக்கில் திரும்பிகொண்டிருந்தனர்.அப்போது ஆறுமுகநேரி அடைக்கலாபுரம்
ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தாண்டி சென்று கொண்டிருந்த போது
எதிரே திருச்செந்தூரில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு
பஸ் பைக் மீது மோதியது. இதில் அந்தோணிசெல்வராஜ், சகிலா, ஆகிய இருவரும்
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பலத்த காயமடைந்த குழந்தை ரிஷிலன்
ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அடைக்காலாபுரம் ரோட்டில் ஏற்பட்ட இந்த விபத்தினால் திருச்செந்தூர்
தூத்துக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும்
காயல்பட்டணம் வழியாக திருப்பிவிடப்பட்டன.ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர்
பார்த்தீபன்,சப்இன்ஸ்பெக்டர்கள் சியாம் சுந்தர்,ராஜகுமாரி ஆகியோர் சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர்
ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவரை போலீசார் கைது செய்து
விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3பேர் பலியான சம்பவம்
ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments