காயல்பட்டணத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டணத்திற்கும், ஆறுமுகநேரிக்கும் இடையே ரத்னாபுரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு அழகிய மணவாளப் பெருமாள் கோயில் சிற்பக் கலை நயத்துடன் அமைந்துள்ளது. பாண்டியர் காலம் விஜயநகர காலம் என்று இருவேறுபட்ட காலங்களிலும் திருப்பணிகள் நடந்துள்ளது.கடற்கரைக் காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் கட்டடங்களும் சிற்பங்களும் பொறிந்து சிதைந்துள்ளன. நீண்ட நாளாக வழிபாடின்றி இருந்து இக்கோயில் திருப்பணிகளுக்குப் பின்பு பொலிவு பெற்றுள்ளது. திருப்பணியும் உழவாரப் பணிகளும் நடந்த போது சிதைவுற்ற நிலையில் 3 கல்வெட்டுக்கள் புதியதாகக் கண்டறியப்பட்டன. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த புதுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், தொல்லியல் ஆராய்ச்சியாளருமான தவசிமுத்து கூறியதாவது, அழகிய மணவாளப் பெருமாள் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப் பெற்று விஜயநகரக் காலத்தில் பல்வேறு திருப்பணிகளைப் பெற்றுள்ளது. கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள உற்சவ கல்மேடைக்கு மேலேயுள்ள சுவரில் 11 வரிகளில் பிற்காலப் பாண்டியர்கால எழுத்தமைதியுடன் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு பொறிந்துள்ளதால் தொடர்ச்சியாக அதனுடைய பொருளை அறிய இயலவில்லை. இருப்பினும் பல செய்திகள் பொதிந்துள்ளன. குட நாட்டு உதைய மார்த்தாண்டன்பட்டினத்து நயினார் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலுக்குத் திருவிளக்கு ஏற்றிடவும், தினசரி வழிபாட்டிற்கு நைவேத்தியம் செய்வதற்கு அரிசி மற்றும் பொருட்கள் வழங்கிட வீர வளநாட்டில் வயல், தோட்டம் மற்றும் குளமும் மதுரை நம்பி என்பவருக்கு வழங்கப்பட்ட தகவல் உள்ளது.
இக்கல்வெட்டில் தற்போது காயல்பட்டணம் என்றழைக்கப்படும் ஊர் உதைய மார்த்தாண்டன்பட்டினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1383 ஆம் ஆண்டினது சேர மன்னனான உதைய மார்த்தாண்டனின் கல்வெட்டுப் பலகையொன்று வீரபாண்டியன்பட்டினத்திற்கும், காயல்பட்டிணத்திற்கம் இடையேயுள்ள காட்டு மொகுதூம் பள்ளி வாசல் அருகே உள்ளது. அதில் அங்கிருந்த பள்ளியொன்றை உதைய மார்த்தாண்டன் பெரும்பள்ளி என்று கூறுகிறது. தற்போது அழகிய மணவான பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு மேற்கண்ட அரசனுடைய பெயரில் அமைந்துள்ளது. என வே இக்கல்வெட்டும் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருத இயலும். மேலும் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலின் மகாமண்டபத்தில் வெளிப்புறம் தெற்குச் சுவற்றில் புதையல் குறித்த கல்வெட்டொன்றும் கண்டறியப்பட்டுள்ளது. தனந்தோன்ற வைத்துப் புதைத்திருந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது.மேலும் சுவற்றின் அடிப்பகுதியில் ஜெகதி என்றழைக்கப்படும் இடத்தில் இராசன் என்ற சொல் காணப்படுகிறது. மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களும் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்ததாகும். காயல்பட்டணம் சங்க காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியுள்ளது. கொற்கையுடன் இø ணந்து செயல்பட்டுள்ளது. தற்பொழுதும் காயல்பட்டணப் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான ஓடுகள், பீங்கான், முதுமக்கள் தாழிகள், அயல்நாட்டு காசுகளெல்லாம் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. கொற்கை முத்து, வலம்புரிச்சங்கு, பஞ்சு, இரும்பு ஆயுதங்கள் ஏற்றுமதியாயின. வைணவக் கோயில்களில் நடைபெறும் அø னத்து திருவிழாக்களும் இ ங்கே நடந்துள்ளது.இவ்வாறு தவசிமுத்து தெரிவித்துள்ளார்.
0 comments