கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்கட்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்துககுப்பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூடங்குளம் பிரச்சினை குறித்து ஆராயவென மத்திய, மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின் நிலையத்திற்கு எதிரானவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு, அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை" என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணுமின் நிலையம் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது, அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற சூழலில் மின் உற்பத்தியினை அங்கே துவங்கலாம் என அரசு முடிவு செய்திருக்கிறது எனவும் அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாத வகையிலேயே வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அரசின் கொள்கைப்படியே புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திக்குறிப்பு கூறுகிறது.
மாநில அரசு அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கூடங்குளம் மீனவர்களின் விசைப்படகுகள் பழுதடையும்போது சரி செய்ய நாகர்கோவிலுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் கூடங்குளத்திலேயே அவ்வாறு பழுதுபார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், மீன்பிடியினை சேமித்துவைக்க வழிசெய்யும் குளிர் பதனீட்டு நிலையம் ஒன்றை உருவாக்கவும், வீட்டு வசதிகளை மேம்படுத்தவும், அப்பகுதியில் சாலை வசதிகளைப் பெருக்கவுமென 500 கோடி ரூபாய் ஒதுக்குவதென்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள்அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் மின்நிலையத்தை இயங்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்துலிருந்து கூடங்குளம் பகுதிமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அமைச்சரவை முடிவு வெளியான பின்னணியில், கூடங்குளத்தில் போராட்டக் குழுத்தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. அங்கே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
0 comments