திருச்செந்தூரைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் பட்டாமாறுதல் சேவை (Online Pata Transfer) படிப்படியாக தொடரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, குடியிருப்பு வருமானம், முதல் பட்டாதாரி மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தற்போது தமிழகஅரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கமாக பொது மக்களுக்கு எவ்வித சிரமுமின்றி இணையம் மூலம் பட்டா மாறுதல் (Online Pata Transfer) தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் ஆட்சியர் உத்தவின் பேரில் கடந்த 13ம் தேதி இணையவழி பட்டா மாறுதல் சேவை துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை தங்களது பொது சேவை மையத்திலும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது மூல ஆவணங்கள், தொடர் ஆவணங்கள், நடப்பு பதிவு ஆவணங்கள் மற்றும் வில்லங்கச் சான்று ஆகியவற்றின் அசல் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லவேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களின் நகலை அந்த மையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். பதிவு கட்டணமாக ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) செலுத்த வேண்டும். பதிவுசெய்த நாளிலிருந்து 15 தினங்கள் கழித்து மனுதாரரின் பட்டாமாறுதல் குறித்த குறுஞ்செய்தி மனுதாரரின் கைபேசிக்கு வந்தவுடன், இணையதளத்தில் பட்டாவினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் வட்டத்தில் முதல் கட்டமாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பொதுசேவைமையம் மற்றும் அருகில் உள்ள திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நாசரேத் தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கி, ஆதிநாதபுரம், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு பொது இ-சேவை மையங்களில் இச்சேவை செயல்படுத்தப்படுகிறது.
இச்சேவை திருச்செந்தூர் வட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும், மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இதர வட்டங்களான சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய வட்டங்களில் இணையதளம் மூலம் பட்டாமாறுதல் சேவை (Online Pata Transfer) படிப்படியாக தொடரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 comments