முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஏராளமான முதியவர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த விதவை பெண்கள் மற்றும் முதியவர்கள் உதவித் தொகை கேட்டு ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கரிசல்குளத்தைச் சேர்ந்த விதவை பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை கேட்டும் அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்கவில்லை.
இதனால் விதவை பெண்கள் மற்றும் முதியவர்கள் சாப்பிட வழியில்லாத நிலை உள்ளது. எனவே, ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் மனு:தூத்துக்குடி மாவட்ட பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 76 ஆசிரியை உள்பட 102 ஆசிரியர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: தமிழகம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பகுதி நேர ஆசிரியர்களாக 16,549 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.ஆனால், இதுவரை எந்தவித சலுகைகளும் கிடைக்கவில்லை. எனவே, நிகழ் கல்வியாண்டு முதல் அனைத்து ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து முழுநேர பணி வழங்க கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்க வலியுறுத்தல்: தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செபத்தையாபுரத்துக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது. பல முறை ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், மாதத்தில் இரண்டு நாள்கள் மட்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தை தினமும் இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments