ஆறுமுகனேரி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் சென்னை ஐசிஎப், திருவள்ளூர் மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன.
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கால்பந்து கழகம் இரண்டும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சாம்பியன் கிளப் கால்பந்து போட்டி கடந்த 7ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில், சென்னை ஐ.சி.எப். அணியும், இராமநாதபுரம் சேதுபதி கிளப் அணியும் மோதின. இதில், 4-2 என்ற கோல்கணக்கில் சென்னை, ஐ.சி.எப். அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற போட்டியில் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், திருவள்ளுவர் மாவட்ட அணியும் மோதின. இதில், 3-0 என்ற கோல்கணக்கில் திருவள்ளுர் மாவட்ட அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டிகளை டிசிடபிள்யூ நிறுவன செயல் உதவித் தலைவர் (நிர்வாகம்) மே.சி. மேகநாதன் தொடங்கிவைத்தார்.
மாவட்ட கால்பந்து கழகச் செயலர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, போட்டி ஒருங்கிணைப்பாளர் லடிஸ்லாஸ் ரொட்ரிக்கோ மற்றும் துணை மேலாளர்கள் விஜய், சித்திரைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
Daily News
0 comments