ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர் ஜெயலலிதா. : ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்




தமிழக முதல்வர் ஜெயலலிதா 11 நாட்களுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 4-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் தலைமைச் செயலகம் வரவில்லை. மேலும், வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறாக ஜெயலலிதா பொது நிகழ்ச்சிகளை தவிர்த்துவந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக பலதரப்பிலும் விமர்சிக்கப்பட்டது. 

எதிர்கட்சியினரும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (திங்கள் கிழமை) முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருவார் எனக் கூறப்பட்டது. இதற்காக அதிமுகவினர் முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் போஸ்டர்கள் வைத்து பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அன்று அவர் தலைமைச் செயலகம் வரவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதிஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மதியம் 1.10 மணியளவில் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திகுறிப்பில், "முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் புதிய அரசு கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தெரிவு செய்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தலைமைச் செயலாள ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply