சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழாவையொட்டி 42 அடி உயர வெட்காளி அம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் ராமமூர்த்தி சுவாமிகளின் 31–ம் ஆண்டு ஆனி மாத சக்திமாலை இருமுடி விழா, வேள்வி பூஜை நேற்று காலையில் தொடங்கியது. உலக நலனுக்காக, காளி பராசக்தி அம்மனுக்கு வேள்வி பூஜையை ராமமூர்த்தி சுவாமிகள் நடத்தினார்.
வேள்வி பூஜையில் பழங்கள், நவதானியங்கள், 9 வகையான உணவுகள், விவசாய கருவிகள், கலப்பை, மாட்டு வண்டி, மரச்சாமான்கள், தொட்டில், விளையாட்டு பொருட்கள், எழுதுபொருட்கள், மேஜை, நாற்காலி, வேட்டி, சேலை, மூலிகைகள், தேன், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் போடப்பட்டது. 2 அலங்கரிக்கப்பட்ட யானைகள் வேள்வி பூஜையின் அருகில் நின்றன.
தொடர்ந்து 42 அடி உயர வெட்காளி அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ‘காளி சக்தி, பராசக்தி‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி வழிபட்டனர். பின்னர் மகாசித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை நடந்தது. இதில் ராமமூர்த்தி சுவாமிகள், புளியங்குடி பள்ளிவாசல் இமாம், மதுரையைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதியம் காளி பராசக்தி வார வழிபாட்டு மன்ற செயலாளர் திருகுமரன் தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் 600–க்கு மேற்பட்ட பஸ்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
செவ்வாடை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவசித்தர் பீடத்தில் இருமுடியை இறக்கி வைத்து வழிபட்டனர். மாலையில் ராமமூர்த்தி சுவாமி வெண்கல தீச்சட்டி ஏந்தி, தவசித்தர் பீடத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
0 comments