ஆறுமுகனேரி பகுதியில் நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆறுமுகனேரி பொய்யாங்குளம் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறைதான் பிசான பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு பிசான பருவ விவசாயம் மழையின்றி நடைபெறவில்லை.
தாமிரவருணி ஆற்றின் கடைமடை பாசனமாக இருப்பதால் நிகழாண்டும் மிகுந்த யோசனைக்குப் பின்னர் பிசான சாகுபடி தொடங்கப்பட்டது. செல்லப்பொன்னி என்ற ஆடுதுறை 43, வெள்ளை சம்பா என்ற ஏ.எஸ்.டி 16, கட்டை சம்பா என்ற டி.கே.எம் 9 உள்ளிட்ட ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நிறைகதிர்கண்டு பொதியாகும் நிலையில் உள்ள நெற்பயிர்களில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் உள்ளது. கதிர் கண்ட நிலையில் மருந்து அடிக்க கூடாதென விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் என்னசெய்வது என விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். கடந்த ஆண்டும் விவசாயம் இல்லாத நிலையில் கடன் வாங்கி பயிர் செய்தவர்கள் நெற்பயிர் விளைந்து பயன்தருமா என்று கவலையுடன் உள்ளனர்.
courtesy : Dinamani.com
0 comments