தூத்துக்குடிமாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சிகள், நேற்று, மாணவ, மாணவியரின் பசுமை ஓட்டத்துடன் தொடங்கின.25 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தனிமாவட்டமாக, 1986 அக்.,20ல், உதயமானது. அப்போதைய, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., இதனை துவக்கி வைத்தார். இதன், 25 ஆண்டு நிறைவையொட்டி, மாவட்ட வெள்ளிவிழா, முத்துவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிலமாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் டத்தப்பட்டன.இக்கொண்டாட்டத்தின் 3 நாள் நிறைவு நிகழ்ச்சிகள், நேற்று துவங்கின.பசுமை ஓட்டம்: முதல் நிகழ்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம் இணைந்து, தண்ணீர் சிக்கனம், பாலிதீன் ஒழிப்பு, புவி வெப்ப மயமாதலை தவிர்த்தல், மரம் நடுவதன் அவசியம், மின்சார சிக்கனம் போன்றவற்றை வலியுறுத்தி, பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்ற, பசுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணிக்கு, மரியன்னை பள்ளி முன்பு துவங்கிய இந்த ஓட்டத்திற்கு,கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் துவக்கிவைத்தார். வண்ண, டி-சர்ட் அணிந்த மாணவ, மாணவியர் ஏராளமானோர், நகரின் 5 இடங்களில் இருந்து சைக்கிளிலும், நடந்தும் பேரணியாக வந்து, தருவைவிளையாட்டு மைதானத்தை அடைந்தனர்.
லிம்கா சாதனைக்காக முயற்சி: அங்கு, 1,000 மாணவ, மாணவியர் சேர்ந்து, தமிழக வரைபட வடிவில் நின்றனர். அதனருகிலேயே,மற்றொரு பிரிவாக, 1,000 மாணவ, மாணவியர் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வரைபட வடிவில் நின்றனர்.அதையொட்டி, முத்துவிழா பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதற்கடுத்து, 8,000 மாணவ, மாணவியர் தேசியக்கொடி வடிவில் நின்றனர். அதற்காக, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.லிம்கா மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் நடந்த விழாவில், பசுமை ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. உணவுத்திருவிழாவும் நடந்தது. விழாவின் 2வது நாளான இன்று, கருத்தரங்கம், செல்லப்பிராணிகள் கண்காட்சி, வெளிமாநில கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சியும், இறுதி நாளான நாளை பட்டிமன்றம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கின்றன..
0 comments