ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » பிரச்னைக்குரிய இடத்தை காட்டி பஸ் ஸ்டாண்ட் அமையுங்கள் என்றால் எப்படி அமைக்க முடியும்!

பஸ் ஸ்டாண்ட் உடனடியாக கட்டுவதற்குரிய இடத்தை ஒப்படைக்காமல்
பிரச்னைக்குரிய இடத்தை காண்பித்து ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமையுங்கள்
என்று கலெக்டர் தெரிவித்தால் எப்படி முடியும். அதில் உள்ள குறைபாடுகள்
அனைத்தையும் நீக்கி கொடுத்தால் மீன்வளக்கல்லூரி அருகே பஸ் ஸ்டாண்ட் அமைக்க
தயாராக இருக்கிறோம். ஆனால் அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைந்தால் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் என்று மாநகராட்சி
மேயர் சசிகலாபுஷ்பா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் எங்கு அமையப் போகிறது என்கிற
செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள பழைய
பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்து ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க
வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அதிகமான விருப்பம்
இருந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி
கூட்டம் முடிந்த பிறகு மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள்
ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க கலெக்டர் தேர்வு செய்துள்ள பைபாஸ் ரோடு
மீன்வளக்கல்லூரி அருகே உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அதிமுக கொறடா வீரபாகு
மற்றும் கவுன்சிலர்கள் உடன் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து வந்த மேயர்
சசிகலாபுஷ்பா மாநகராட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் குறித்து
மக்களுக்கு முழுமையான தகவலை தெரிவிக்க வேண்டியது மாநகராட்சியின்
கடமையாகும். கலெக்டர் மீனவளக்கல்லூரி அருகே இடத்தை தேர்வு செய்துள்ளார்.
ஆனால் அந்த இடத்தை பெறுவதற்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அந்த பிரச்னைகளை
எல்லாம் கிளியர் செய்து மாநகராட்சியிடம் கலெக்டர் கொடுத்தால் அந்த இடத்தில்
ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும்
இல்லை. உடனே அந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாநகராட்சி தயாராக
இருக்கிறது. மீன்வளக்கல்லூரி அருகே கலெக்டர் தேர்வு செய்துள்ள இடம்
தொழில்துறை புறம்போக்கு நிலம். அது மாநகராட்சிக்கு சொந்தமான இடமோ,
கலெக்ட்ரேட்டிற்கு சொந்தமான இடமோ இல்லை. தொழில்துறை புறம்போக்கில் இருந்து
அதனை மாற்றிக் கொடுக்க வேண்டும்.
மொத்தம் 16 ஏக்கர் நிலம் உள்ள இந்த இடத்தின் நடுப்பகுதியில் 2 ஏக்கர் நிலம்
தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான இடமாகும். அந்த இடத்தை துறைமுக
நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தை
மாநில அரசுக்கு மாற்றுவது என்பது மிக எளிதான காரியமாக இருக்குமா என்பது
சந்தேகம் தான். அந்த இடத்தில் மின்சாரம் செல்லக் கூடிய இரண்டு மிகப் பெரிய
டவர் உள்ளது. அந்த டவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அது சிரமமான
காரியம் என்றும், இதற்காக மட்டும் 25 லட்ச ரூபாய் செலவாகும் என்று
மின்வாரியத்தில் தெரிவிக்கின்றனர். கலெக்டர் பஸ் ஸ்டாண்ட்டிற்கு தேர்வு
செய்துள்ள இடம் மிகவும் தாழ்வான இடமாகும். இந்த இடத்தில் மணல் போட்டு
நிரப்பி அதனை சீர் செய்யவே மிகவும் அதிக செலவாகும். ஒருங்கிணைந்த பஸ்
ஸ்டாண்டிற்கு மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள இடத்தை சுற்றி உப்பளங்கள்
அதிகம். குஜராத்தை அடுத்து உப்பு உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில்
இரண்டாம் இடத்தில் இருந்து வருவதற்கு முக்கிய காரணமே தூத்துக்குடி தான்.
தூத்துக்குடியில் உப்பளப் பகுதியில் உள்ள நிலங்கள் வேறு வகைக்கு
பயன்படுத்தப்பட்டால் உப்பு உற்பத்தி குறையும். எந்த காரணத்தை கொண்டும் இந்த
இடத்தை ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு வழங்க கூடாது என்று
உப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்து கடிதம்
எழுதியுள்ளனர்.இந்த இடத்தின் அருகே லாரிகள் நிறுத்தும் இடம் (டிரக்
டெர்மினல்) அமைக்க மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்துள்ளது. இதனால்
ஆயிரக்கணக்கான லாரிகள் அந்த இடத்தில் நிற்பதற்கு வரும் போது பஸ் ஸ்டாண்டில்
இருந்து பஸ்கள் வெளியேர கடும் டிராபிக் நெருக்கடியும், பெரிய அளவிலான
விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நான்கு துறைகள் சம்பந்தப்பட்டுள்ள இடமாக
கலெக்டர் தேர்வு செய்துள்ள இடம் உள்ளது. இவை அனைத்தையும் கிளியர் செய்து
கொடுத்தால் மட்டுமே அந்த இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை அமைக்க
முடியும். ஆனால் இவை எல்லாம் முடியுமா என்பது கேள்விக்குறிதான்.இன்னும்
பத்து ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி நெருக்கடியை கருத்தில் கொண்டு ஊருக்கு
அவுட்டரில் பஸ் ஸ்டாண்டிற்கு இடம் தேர்வு செய்வதாக கூறுகின்றனர். தற்போது
மாநகராட்சியின் வருவாய் 40 கோடி. பத்து ஆண்டில் சுமார் 300 கோடிக்கு
வருவாய் நிச்சயமாக வந்துவிடும். அதன் பிறகு நெருக்கடி இருந்தால்
அவுட்டருக்கு பஸ் ஸ்டாண்ட் போகட்டும். அதற்குள் மக்களை ஏன் சங்கடத்தில்
ஆழ்த்த வேண்டும்.
தூத்துக்குடிக்கு தினமும் 2 ஆயிரத்து 20 முறை பஸ்கள் பல முறை வந்து
செல்கிறது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மீன்வளக்கல்லூரி அருகே அமைந்தாலும்
இதே பஸ் தான் வந்து செல்லப் போகிறது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்
அவுட்டருக்கு போய்விட்டது என்று தூத்துக்குடிக்கு கூடுதலாக 500 புதிய
பஸ்களா வரப் போகிறது. பழைய பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்து ஒருங்கிணைந்த
பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக அரசு போக்குவரத்துகழக டெப்போவை மாற்றம் செய்ய
வேண்டும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னையில்
சந்தித்து பேசினேன். முதல்வர் ஜெ.,அறிவித்த திட்டம் என்பதால் அவர் உடனடியாக
அதனை மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அதே போல் பழைய பஸ்
ஸ்டாண்டை அடுத்துள்ள எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்திற்கு குத்தகைக்கு
விடப்பட்டுள்ள இடத்தை பஸ் ஸ்டாண்டிற்கு பெறவும் அமைச்சர் மற்றும் உயர்
அதிகாரிகளை சென்னையில் சந்தித்து பேசியுள்ளேன். அவர்களும் அதனை வழங்குவதாக
தெரிவித்துள்ளனர். இந்த இடம் குறித்து கலெக்டர் முடிவு செய்து கொள்ளலாம்
என்றும் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால்
ஏற்கனவே உள்ள பழைய பஸ்ஸ்டாண்ட், அரசு போக்குவரத்துகழக டெப்போ, எஸ்.ஏ.வி
கிரவுண்ட் இணைத்தால் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை சிறப்பாக கட்டி
விடலாம்.திருச்செந்தூர் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து
வருகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில்
லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த
கோயிலுக்கு செல்லக் கூடிய ரோடு மிக மோசமாக இருக்கிறது. அதனை பொது நிதியில்
சீர் செய்யலாம். உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்னை
உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. முதலில் மாவட்ட நிர்வாகம் அதனை சரி
செய்யட்டும். பரந்து, விரிந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சின்ன
பகுதியான தூத்துக்குடி மாநகராட்சியை மட்டும் பார்க்க கூடாது.இவ்வாறு மேயர்
சசிகலாபுஷ்பா தெரிவித்தார். மாநகராட்சி அதிமுக கொறடா வீரபாகு,
கவுன்சிலர்கள் தவசிவேல், மனோகரன், ஜெயக்குமார், சரவணன், மேயர் நேர்முக
உதவியாளர்கள் ராதாகிருஷ்ணன், தனசிங் ஆகியோர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த
பஸ் ஸ்டாண்ட் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளதால்
தூத்துக்குடியில் இந்த பிரச்னை மிகப் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி
வருவதாக கூறப்படுகிறது.

0 comments

Leave a Reply