திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு ரதவீதிகள் மற்றும் மாடவீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடிமரத்தில் காப்பு கட்டிய வே.சிவக்குமார் வல்லவராயர் திருவிழாக் கொடியேற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் ரா.கார்த்திகேயன், மணியம் மது உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பத்துநாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான ஆக.20 ஆம் தேதி பத்தாம் திருநாளையொட்டி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:
திருச்செந்தூர்
0 comments