பழனி மலைக் கோயிலுக்கு படிக்கட்டுகளில் ஏறிச்செல்லமுடியாத பக்தர்கள் செல்ல பயன்படும் ரோப்காருக்கு புதிய இரும்பு வடக்கயிறு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் மலைக் கோயிலுக்கு பாதுகாப்பாகச் செல்லும் பொருட்டு, இந்த ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, கந்த சஷ்டி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, ரோப்காரின் வடக்கயிறை புதிதாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு ரோப்கார் நிறுத்தப்பட்டு, புதிய வடக்கயிறு மாற்றும் பணிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக, கொல்கத்தாவிலிருந்து ரோப்கார் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, பிளைசிங் எனப்படும் முக்கியமான வடக்கயிறு இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்ததும், சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ரோப்கார் வல்லுநர் குழு நேரில் ஆய்வு செய்யும். பின்னர், பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப்கார் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments