கடல் அட்டை பதுக்கிய வழக்கு தொடர்பாக பிடிபட்டவரை, வனத் துறை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் திங்கள்கிழமை இரவு மீட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரையில் 18 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை ஆறுமுகனேரி போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த அல்அமீன் (36) என்பவரைப் பிடித்து, மன்னார் வளைகுடா தேசிய உயிர்கோளக காப்பக வனத் துறையினரிடம் இரவில் ஒப்படைத்தனர். இருப்பினும், பிடிபட்ட அல் அமீன் திடீரென மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வன அலுவலர் சோலை, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அளித்த புகார் மனுவில், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில், கடல் அட்டைகளை கடத்தியதாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல் அமீன் என்பவரை விசாரணை செய்து கொண்டிருந்தோம்.
அந்நேரம் கார், 3 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வனத் துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் எங்களை மிரட்டி, விசாரணைக் கைதியான அல் அமீனை அழைத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கும்பலில் அல் அமீனின் சகோதரர் இக்பால் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றிருந்தனர் எனத் தெரிவித்திருந்தார்.
சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் திரண்டு, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டுதல், விசாரணைக்கு பிடித்து வைத்திருந்த நபரை கடத்திச் சென்றது என 6 பிரிவுகளில் இக்பால் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து வடபாகம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments