தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 24–ந்தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளார். மேலும் தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து அரசியல் கட்சியினரை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள ஒரு மடத்தில் தனியார் டிரஸ்ட் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாசில்தார் செல்வபிரசாத், ஆர்.டி.ஓ. தமிழ்ராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலவசமாக பெண்களுக்கு கொடுக்கப்பட இருந்த 1500 சேலைகள் வழங்குவதை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த தனியார் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் வழக்கமாக மகளிர் தினத்தன்று பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்குவோம் .அதை எப்படி தடுக்கலாம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தாசில்தார் செல்வபிரசாத், ஆர்.டி.ஓ. தமிழ்ராஜன் ஆகியோர் டிரஸ்ட் நிர்வாகிகளுடன் இலவச சேலைகள் கொடுப்பது குறித்து கலெக்டரிடம் முறையாக அனுமதி வாங்கி வழங்குங்கள் என்றனர். இதையடுத்து பெண்களுக்கு வழங்கப்பட இருந்த சேலைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
Courtesy: Maalaimalar.com
0 comments