ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் வாரிய கூட்டம் சென்னையில் உள்ள அதன் மண்டல அலுவலத்தில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இயக்குனர்கள், துணை கவர்னர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்கள், திட்டங்களின் விளைவுகள் குறித்து வாரிய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் கிராமப்புற வங்கிச்சேவை, மாணவர்களுக்கான கல்விக்கடன் நிலவரம் தொடர்பாகவும் விவாதித்தோம்.
ரூ.10 லட்சத்திற்கு உள்பட்ட சிறு, நடுத்தர நிறுவன தொழில்களுக்கான கடனை எவ்வித பிணையும் இல்லாமல் வழங்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 70 சதவீத சிறு, நடுத்தர நிறுவன தொழில் கடன் பிணை இல்லாமல் வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 30 சதவீத கடன் மட்டுமே பிணையுடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்பண்ட், சங்கிலி தொடர் விற்பனை (மல்டி-லெவல் மார்க்கெட்டிங்) போன்ற சட்டவிரோத பண பரிமாற்ற திட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த பிரச்சினை, ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்புக்குள் வராது என்ற போதிலும் இந்த சட்ட விரோத பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, தமிழகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரி தலைமையில் மாநில அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய குழு சோதனை முயற்சியாக ஒரு மாவட்டத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளும். இதுபோன்ற சட்டவிரோத பணபரிமாற்ற திட்டங்களால் எவ்வாறு பொதுமக்களை கவர்ந்து இழுக்கின்றன? என்பது குறித்து எல்லாம் ஆராயும். அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கான கல்விக் கடனை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வங்கிகள் கல்விக்கடன் வழங்கி உள்ளன. ஒருசில மாணவர்களுக்கு கடன் வழங்கப்படாமல் இருக்கலாம். தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வங்கிகள் கல்விக்கடன் வழங்க வேண்டும். பணம் இல்லை என்ற காரணத்திற்காக எந்த மாணவருக்கும், மாணவிக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது.
கல்விக் கடன் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி எவ்வித வழிகாட்டி நெறிமுறைகளையும் வரையறை செய்யவில்லை. இந்திய வங்கிகள் சங்கம்தான் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை நிர்ணயித்துள்ளது. மற்ற கடன்களை போல வங்கிக்கடனும் எவ்வாறு வழங்கப்படுகிறது? என்பதை மட்டுமே ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்.
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கணக்கு அறிக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் வெளியிடப்படும். கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி மந்திரி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சில வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தன. வட்டி விகிதத்தை குறைக்காத வங்கிகளும் குறைக்க முன்வர வேண்டும்.
புதிதாக வங்கிகள் தொடங்க லைசென்சு கேட்டு இந்திய தபால்துறை உள்பட 26 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளன. விதிமுறைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் லைசென்சு வழங்கப்படும். அனுமதி விஷயத்தில் தபால்துறை என்பதற்காக அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படாது. விதிமுறைகளின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்படும்.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்து வருவது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான். ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை தடுக்க அனைத்து வழிகளிலும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ? அந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.) தற்போது குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை. நிதி நிலை, பணப்புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் சி.ஆர்.ஆர். நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் (என்.பி.ஏ.) அளவு அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் வாராக்கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாராக்கடன் சுமையை சம்பந்தப்பட்ட வங்கிகள் தாங்கிக்கொள்ள முடியும். கடன் சுமையை குறைக்க செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்.
கள்ளநோட்டு புழக்கமும் மிகுந்த கவலை அளிக்கிறது. கள்ளநோட்டுகள் அச்சடிப்பது தடுக்கப்படுவதுடன் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வசம் எதாவது கள்ள நோட்டுகள் வந்தால் அதை உடனடியாக அருகில் உள்ள வங்கிக்கிளையில் ஒப்படைக்க வேண்டும். கள்ள நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட சதவீத அளவுக்கு இழப்பீட்டு தொகையை வழங்குகிறது.
இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
0 comments