தெலங்கானா மாநிலம், செகந்திராபாதில் தானம் பெறப்பட்ட இருதயம் சிறப்பு விமானத்தில் சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டு, வட இந்தியப் பெண் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளதுது.
செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் ஹஜித் (20). இவர் வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹஜித் அன்று மாலை மூளைச்சாவு அடைந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் ஹஜித்தின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க அவரது பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். அவரது இருதயம் தானமாகப் பெறப்பட்டு, சென்னையில் சிகிச்சையில் பெற்று வரும் நோயாளிக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து செகந்திராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்ட இருதயம் 7.36 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து காலை 8.15 மணிக்கு இருதயத்துடன் புறப்பட்ட சிறப்பு விமானம் மூலம் 9.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது.
அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் 9.19 மணிக்கு கிளம்பி சென்னையில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 9.32 மணிக்கு இருதயம் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த 30 வயதான வட இந்தியப் பெண்ணுக்கு இருதயம் பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags:
News
0 comments