திருச்செந்தூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கடற்கரையிலும், ஆற்றங்கரையிலும் ஏராளமானோர் தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இந்துக்கள் அமாவாசை தினத்தன்று மறைந்த தங்களது
மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதிலும் தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் கொடுக்கப்படும் தர்ப்பணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் முன்னோர்களின் இறப்பு தேதி தெரியாதவர்கள் கூட, இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் அது அவர்களை சென்றடையும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத அமாவாசை தினத்தன்று மக்கள் தங்கள் மூதாதையர்களை வழிபடுவது வழக்கம். இதையொட்டி நீர் நிலைகளுக்கு அருகே கூடி, எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்வார்கள். வழக்கம்போல் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். பின்னர் அனைவரும் கடலில் புனித நீராடினர். இதேபோன்று தூத்துக்குடி உடபட பல்வேறு கடற்கரை பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம், மற்றும் தாமிரபரணி கரைகளில் ஏராளமானோர் அதிகாலையில் இருந்தே தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
0 comments