ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆறுமுகநேரி » ஆடிக்காற்றுடன் அக்னி வெயில் ஆறுமுகநேரி மக்கள் அவதி


தூத்துக்குடி தென்மாவட்ட பகுதியில் அக்னி வெயிலுடன் ஆடி காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று சொல்வதுண்டு. ஆடிக்காற்று வீசத்
துவங்கினால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ரோட்டில் வருவோர் போவோர்
அனைவருக்கும் புழுதி வாரி வீசி சென்று விடும். ஆடி மாதம் வெளியில் சென்று
வந்தாலே உடல் முழுவதும் மணலாக காணப்படும். அந்த அளவிற்கு காற்றின் வேகம்
புழுதி மணலை அபிஷேகம் செய்வது போன்று வீசும். ஆனால் தற்போது ஆடிக்காற்று
வேகம் குறைந்து விட்டது. ஆடி மாதம் வீசும் காற்றினால் தேரிகாட்டுப்
பகுதியில் செம்மண் வானில் பறந்து வானமே சிவப்பு வண்ணத்தில் தோன்றும். ஆனால்
தற்போது ஏதோ வந்தோம், வீசினோம், சென்றோம் என்பது போன்று வீசி வருகிறது.
இதனால் தான் என்னவோ வீடுகளில் அம்மியும் குறைந்துவிட்டது. 
ஆடி மாதம் காற்று அதிகமாக இருந்தால் பருவ மழை அதிகம் பெய்யும் என
கூறுவதுண்டு. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு ஆடி காற்றின் வேகம் குறைந்து வருவதால்
பருவ மழையும் குறைந்து வருகிறது. தற்போது ஆடி மாதம் துவங்கி ஒரு வாரம்
முடிவடைந்துள்ளது. ஆடிக்காற்று ஓரளவிற்கு முன்பு போன்று வேகம் இன்றி ஏதோ
வீசிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின்
தென்பகுதியில் வெயிலின் உக்கிரம் கோடை காலத்தை நினைவு கூறும் வகையில்
வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் எவ்வளவு
இருக்குமோ அதே போன்று 99 முதல் 100 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்து
வருகிறது. குறைந்த அளவு வீசி வரும் ஆடி காற்று, அதிக அளவு தாக்கி வரும்
அக்னி நட்சத்திர வெயில் இந்த இரண்டு கொடுமைகளையும் தாங்க முடியாமல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவித்துக் கொண்டிருக்கின்றனர். 
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கிணறுகளில் தண்ணீர் நாளுக்கு நாள்
வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் வருண பகவானின் கருணையினால் ஏதாவது
ஆச்சர்யம் நடக்குமா, மழை வருமா என பொதுமக்கள் ஆவலுடன் இறைவனை வேண்டி
வருகின்றனர்.

0 comments

Leave a Reply