ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றியவர் பா.இராமச்சந்திர ஆதித்தன். பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டதன் மூலம் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை அவர் பெற்றிருந்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்கும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன், தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு, காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு, அன்னாரது பெயரை சூட்டிட வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை” என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜெயலலிதா, சென்னை மாநகர மேயர் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் 3.8.2015 அன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை” என்று பெயர் மாற்றம் செய்ததற்கான அரசாணையும் 12.8.2015 அன்று வெளியிடப்பட்டது.
பா.இராமச்சந்திர ஆதித்தன் நினைவைப் போற்றும் விதமாக, அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை” என்று புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலை பெயர் பலகையை நான் விரைவில் திறந்து வைப்பேன் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை” என புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலை பெயர் பலகையை ஜெயலலிதா இன்று நேரில் சென்று திறந்து வைத்தார்.
0 comments