ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » பாஸ்போர்ட் விசாரணை இனி ஆன்லைனில் : விரைவில் புதிய திட்டம் அமல்

போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை இனி ஆன்லைனில் : விரைவில் புதிய திட்டம் அமல்


இனிமேல் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணையை மூலம் செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலுக்கு கொண்டுவருகிறது.

தற்போது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அவர்களது விண்ணப்ப நகல்கள், இறுதியாக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விண்ணப்பங்களை சரி பார்த்து உரிய சான்றிதழ்கள் வழங்குவதற்கென்றே போலீசில் தனியாக ‘‘பாஸ்போர்ட் பிரிவு’’ ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் வீட்டுக்கு சென்று உளவு பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவார்கள்.  சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத பட்சத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என்று போலீசார் பரிந்துரை செய்வார்கள். இதன் பின்னரே  அதிகாரிகளிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முடியும்.

இப்பணிகளை எளிமையாக்கும் வகையில் பாஸ்போர்ட் விசாரணைகள் அனைத்தையுமே ஆன் லைனிலே செய்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் தேசிய மக்கள் தொகை பட்டியல், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் புதிய சர்வர் ஒன்று தொடங்கப்பட உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை ஆன் லைனிலேயே கண்டறியும் வகையில் கிரைம் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்ற பெயரில் புதிய முறையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

இதன் மூலமாக பாஸ்போர்ட் விசாரணையை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இப்பணிகளை செய்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு திரும்பியதும் இப்பணிகள் அனைத்தும் முழு வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வருகிற நவம்பர் மாதம் முதல் ஆன் லைன் மூலமாக போலீசார் பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நேரடியாக சென்று போலீசார் பாஸ்போர்ட் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவதால்   7 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரையிலும் இதற்காக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வருகிறது. ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் காலதாமதம் ஏற்படாது. போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் இப்பணிகளை செய்து முடிப்பார்.

பாஸ்போர்ட் சேவையை விரைந்து முடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அறிவுரை வழங்கினார்.இதை தொடர்ந்தே ஆன்லைனில் பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் அமலுக்கு வந்த பின்னர், பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர், கம்ப்யூட்டரை தட்டினாலே போதும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் போட்டோ உள்ளிட்ட அனைத்து விவரங்களுமே அவரது விரல் நுனிக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply