திருச்செந்தூர் பேரூராட்சிப் பகுதியில் ஆகஸ்ட் 15 முதல் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் ஒரு கோயில் நகரம். இங்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் தினசரி வந்து செல்கின்றனர். இதனால் நகர்புறத்தை சுகாதாரத்தோடும், அழகாகவும் வைக்க பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் பொதுசுகாதாரத்தை பேணவும், சுற்றுச்சூழல் காக்கவும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பாலிதீன் பைகள் பயன்படுத்தவது முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும் பேரூராட்சி மன்ற தீர்மானத்தின்படி பாலிதீன் பயன் படுத்தும் கடைகளுக்கு ரூ. 2000-மும், பாலிதீன் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ரூ. 1000-மும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பை போன்றவற்றைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments