சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அபாயமணி ஒலித்து பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதனால், பல கோடி நகை, பணம் தப்பியது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே இட்டமொழி சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று, வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. முதன்மை மேலாளராக தென்காசியைச் சேர்ந்த சிக்கந்தர் சாதிக் பணிபுரிந்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு 12 மணியளவில் வங்கியின் அபாயமணி ஒலித்துள்ளது. உடனே, அருகில் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வங்கிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வங்கியிலிருந்து மூவர் தப்பி ஓடினர். தகவலறிந்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. கனகராஜ், ஆய்வாளர் (பொறுப்பு) ராபின்சன், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கி வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், எரிவாயு உருளை, கேஸ் வெல்டிங் இயந்திரம், கையுறை, இரு தலைக்கவசங்களை மர்ம நபர்கள் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும், வங்கி முன்புள்ள ஒலிபெருக்கி,, சிசிடிவி கேமரா வயர்கள், மின்வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, தப்பி ஓடிய நபர்கள் பண்டாரபுரம் பகுதிக்குச் சென்றதை அறிந்து, போலீஸார் அங்கு சென்று தேடினர். அப்போது அங்கு ஒரு கிணற்றில் பதுங்கி இருந்த இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கன்னிராஜ்புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் சிங்கராஜ் (26) என்பதும், சங்கரன்குடியிருப்பில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், வங்கியில் திருட முயன்று தப்பி ஓடியவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்தது. இவருடன் சேர்ந்து சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் செந்தில் (27), சங்கரன்குடியிருப்பு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சேலத்தைச் சேர்ந்த பண்டாரம் மகன் சங்கர் ஆகியோரும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சனிக்கிழமை வங்கிக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் காலையில் வந்து அங்குள்ள சிசிடிவி கேமரா, மின் வயர்களை துண்டித்துச் சென்றுள்ளனர். பின்னர், இரவில் மீண்டும் வந்து வங்கியின் கிழக்குப் பக்கமுள்ள சிறிய சுவரில் ஏறி உள்ளே சென்று வங்கிக் கதவைத் திறக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கி அபாயமணி ஒலித்ததும் பொதுமக்கள் திரண்டு வந்ததால் தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து, சிங்கராஜை போலீஸார் கைது செய்தனர்.
இதில், கோழிப்பண்ணை நடத்தி வந்த செந்தில், கொள்ளையடிக்க முயன்ற இந்த வங்கியில்தான் கடன் வாங்கியிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடன் வாங்கிய வங்கியிலேயே கொள்ளையடிக்க முயன்ற செந்தில் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
0 comments